மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை – கே.ஏ.செங்கோட்டையன் | சாதிவெறி கூட்டத்திற்கு தீனி போடக் கூடாது! – பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தல்..


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழக்குவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அறிவித்ததை தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அரசியலை தாண்டி, கல்வியாளர்களும் இந்த அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.

இதுகுறித்து பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிக்கையில்,
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அவர்கள் எந்த கல்வி நிறுவனத்தில் படிக்கின்றனர், அவர்களின் படிப்பு விவரம், பிறந்த தேதி, அவசரத் தேவைக்கு அவர்களின் இரத்த வகை மற்றும் உடனடி தொடர்பு விவரம் ஆகியவை மட்டுமே இடம் பெறுவது வழக்கம். இந்த விவரத்தில் கூட சிலவற்றை தவிர்ப்பார்கள்.

எந்த காரணத்தைக் கொண்டும் அவர்களின் சாதியையோ மதத்தையோ குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் நோக்கத்திற்காகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட‌ வேண்டிய உரிமைகளுக்கான கணக்குகளுக்காக மட்டுமே மதம் மற்றும் சாதி விவரங்கள் சேர்க்கையின் போது கோரப்படும். இந்த விவரங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் அலுவலகத்தில் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும். வருகைப் பதிவேடு உள்ளிட்ட வகுப்பறைப் பதிவேடுகளில் கூட இத்தகையத் தகவல் தேவையற்றது.‌

சமூக மற்றும் கல்விப் பின் தங்கல் காரணமாக காலம்காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகங்கள் பெற வேண்டிய முன்னுரிமைக்காக வருவாய்த்துறை வழங்கிடும் சான்றிதழ் சாதி சான்றிதழ் அல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 உத்தரவாதப்படுத்தும் உரிமைகள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், சமூக மற்றும் கல்விப் பின்தங்கலுக்கு உள்ளான மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு தேவைகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15 மற்றும் 16 வழங்கியுள்ள‌ உரிமையை பெறுவதற்காக வழங்கப்படும் சான்றிதழை சாதிச் சான்றிதழ் என்று புரிந்துக் கொள்வதே தவறானதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மக்களின் வாழ்வியலாக அமையும் வரையும், இந்திய அரசமைப்புச் சட்டம் உத்திரவாதப்படுத்தும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் அடையும் வரையிலும் இத்தகைய சான்றிதழ் வழங்கப்படும்.

சமூக மற்றும் கல்விப் பின்தங்கலுக்கு உள்ளான மக்களுக்கு தொடக்கப் பள்ளி சேர்க்கையின் போது மக்களின் சமூக ஒடுக்குமுறையின் அளவின் அடிப்படையில் வருவாய்த் துறை வழங்கும் சான்று நிரந்தச்சான்றிதழ்.

ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இருக்க அடையாள அட்டையில் இந்த விவரம் எதற்கு?

அடையாள அட்டையை ஸ்கேன் செய்து இந்த விவரத்தை யார்? எதற்காக தெரிந்துக் கொள்ள வேண்டும்?

நாடு விடுதலை அடைந்து, சட்டத்தின் ஆட்சி நடைமுறைக்கு வந்து, எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னர் கூட சமூக சமத்துவத்தை அடைய முடியவில்லை என்பது நமது சமூகம் பண்பாட்டு ரீதியாக இன்னும் முன்னேறவில்லை என்பதன் வெளிப்பாடு. இதற்கு வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும்.

ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிகளுக்கு தீண்டத்தகாதது என்பதால்தான் எந்த சாதியினரும் மற்ற எந்த சாதியினருடனும் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை.

தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டதே சாதி.

ஒருவர் மற்றவருக்கு உறவினர் ஆக இயலாத வகையில் தீண்டாமையின் காரணமாக சாதி செயலின்மையை உருவாக்குகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17ன் படி தீண்டாமையின் விளைவாக உருவாகும் எந்த செயலின்மையும் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட சாதியை பின்பற்றுவது சட்டப்படி குற்றமே‌.

ஒரு மாணவருக்கு பள்ளி, கல்லூரி , பல்கலைக்கழகங்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது இந்திய சமூக இழுக்கை சுமந்துகொண்டு திரிய வேண்டிய அவசியத்தை மாணவர்களுக்கு உருவாக்குவது ஆகும்.

அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், காவல்துறையினர், ஆசிரியர்கள் உட்பட பலரும் சாதிய வன்மத்துடன் நடந்துக் கொள்கின்றனர் என்ற புகார் தொடர்ந்து எழும் சூழலில், அடையாள‌ அட்டையை ஸ்கேன் செய்து, சாதி அறிந்து, ஒரு மாணவர் பழிவாங்கப்படவே இத்தகைய நடைமுறை பயன்படும். எந்த வகையிலும் இத்தகைய நடைமுறை மாணவர்களுக்கு நன்மை செய்யாது.

சாதி வெறிக் கூட்டத்திற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

– மனோ


banner

Related posts

நெல்லை மாவட்டம் திசையன்விளைய திக் திக்… எரிந்த காரில் 4 சடலங்கள்.. அதிர்ந்த போலீஸ்..அதிமுகவின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் தொடர் சம்பவங்கள்..

Ambalam News

சதி திட்டங்களை முறியடித்து.. தமிழக பெண்களுக்கு டபுள் ஜாக்பாட்.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Ambalam News

பெண் சிசுகொலை : கள்ளக்குறிச்சி பகீர்

Ambalam News

Leave a Comment