திமுக கூட்டணிகக்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் ஒரு கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழக’ நிர்வாகிகள் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திமுகவின் கூட்டணி பலமும் செல்வாக்கும் உயர்ந்துள்ளது. 2026 தேர்தலில் நான்கு முனைப்போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சிகள் களம் அமைந்து தேர்தல் யுக்திகளை வகுத்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் வேளையில் பிஸியாகி இருக்கின்றனர்.
திமுக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு அசுர பலத்துடன் களத்தில் நிற்கிறது. அதற்க்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததால் அதிமுக அதிருப்தியில் இருக்கிறது. கம்யூனிஸ்ட் தொடங்கி காங்கிரஸ் வரை எவ்வளவோ பேசி பார்த்தும் எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி சேர முன் வரவில்லை. அதே நேரத்தில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இறுதி நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல தேர்தல்களை தனித்தே சந்தித்து ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 தேர்தலையும் தனித்து சந்திக்க போவதாக கூறியதோடு பல தொகுதிகளுக்கு வேட்பாளரையும் அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய், தனி கூட்டணி அமைத்து தான் போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போதுபுதிய கட்சி ஒன்று திமுக கூட்டணியில் இணைந்து திமுகவின் கரத்தை வலுப்படுத்தி இருக்கிறது.
பிஎல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையிலான நமது மக்கள் முன்னேற்ற கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
அடிப்படையில் சாதி அமைப்பான தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பின் தலைவர் தான் ஜெகன்நாத் மிஸ்ரா. கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் இந்த பேரவை ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. தற்போது ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ திமுக கூட்டணியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

