
ஏழை எளிய நடுத்தர வர்க்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு பல உதவிகளை செய்து வந்தாலும், மாணவர்களின் நலனில் சில தனி மனிதர்கள் காட்டும் அக்கரை, கல்வி சார்ந்த உதவிகள், அந்த மாணவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் முன்னெடுப்புகள் போன்ற தன்னலமற்ற உதவி, உழைப்பு நம்மை வியக்கச் செய்கிறது.

அந்த வகையில், நெருக்கடியான ஒரு துறையாக நம்மால் அறியப்பட்ட தமிழ்நாடு காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரியும் ஒருவர், தனது மனைவியோடு சேர்ந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நேரம் ஒதுக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கோடு, யாரிடமும் எவ்வித பண உதவி அன்பளிப்புகள் என எதையும் எதிர்பாராமல் தனது சொந்த செலவில் கட்டணமற்ற கல்வி மையத்தை நடத்தி நடத்தி வருகிறார் என்று அறியும் போது வியப்பாகத்தான் இருக்கும். ஆனால் தனி ஒரு மனிதன் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தனது ஓய்வு நேரங்களையும், பணத்தையும் செலவிட்டு தன் மனைவியோடு உழைத்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூரை சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் அ.மணிமனோகரன் அவரது மனைவி ஜெயலட்சுமி மணிமனோகரன் இவர்கள் இருவரும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் விதமாக பட்டறைப்பெரும்புதூரில் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் கட்டணமற்ற ஒரு கல்விமையத்தை நடத்தி வருகின்றார்.

இந்த கட்டனமில்லா கல்வி மையத்தில் பள்ளி முடிந்து, மாலை விட்டு திரும்பும் மாணவர்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு ஏழு மணி வரை 4 பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தேவைக்கு சிற்றுண்டி, திண்பண்டங்கள் போன்றவற்றை இந்த அறக்கட்டளை நிர்வாகத்தின் வாயிலாக வழங்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 2400 சதுர அடியில் இந்த கல்வி மையம் செயல்படுகிறது. மாணவர்களின் தாகம் போக்க ஆர். ஓ. முறையில் சுத்திக்காரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஆண் ,பெண் பாலருக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள் என்று, மாணவர்களின் நலனில் அக்கரை எடுத்து கொண்டு செயல்படுகிறது காவல் ஆய்வாளர் அ. மணிமனோகரன் அவர்களின் இந்த கட்டணமில்லா கல்வி மையம்.
இதையெல்லாம் விட மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எவ்வித கட்டணமும் இன்றி வாரத்தில் ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதற்கும் எவ்வித கட்டணமும் இல்லை. சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, திண்பண்டங்கள், மதியம் பிரியாணி என அவர்கள் வீடு வந்து சேரும் வரை அனைத்து செலவுகளையும் காவல் ஆய்வாளர் அ. மணிமனோகரன் அவர்களின் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது.

”ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து” – ஒரு தலைமுறையில் பெரும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்ற திருவள்ளுவரின் கூற்றை உணர்தவர்களால் மட்டுமே இதுபோன்ற தன்னலமற்ற கல்விப்பணியில் பணியில் ஈடுபடமுடியும். இதுபோன்ற கல்வி பணிகளுக்கு வரவேண்டும் என்பவர்களுக்கு முன்னுதாரணமாகி இருக்கிறார் காவல் ஆய்வாளர் அ.மணிமனோகரன்