அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே, அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், “அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியதுடன் 10 நாள் கெடுவும் விதித்தார். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி

தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய கே.ஏ.செங்கோட்டையன் திடீரென, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இதற்கிடையே, கே.ஏ.செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நேற்று முடிவடைந்த நிலையில், திடீரென அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம், டெல்லி வருகைக்கான காரணம் குறித்து கேட்டபோது, சரியாக பதில் கூறாமல் சென்றுவிட்டார்.
டெல்லி சென்ற அவர் புதிதாக துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி, இரவு உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது, முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்தார் இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்த புகைப்படங்களை இன்று காலை வெளியிட்டார். மேலும், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் என்ன பேசினார் என்ற தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்..
எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம் என பயங்கரமாக சவுண்ட் விட்டு வீரவசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். பொய் சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?. உள்துறை மந்திரியை சந்தித்து வெளியே வரும்போது முகத்தை மூடி வர வேண்டிய அவசியம் என்ன?.. என்ன காரணத்துக்காக அப்படி முகத்தை மூடி வந்தார்.? என்பதை பழனிசாமிதான் சொல்ல வேண்டும். அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாட்டு மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வியைத் தழுவுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்