நகை திருட்டு புகார் அளித்தோம்… போலீசார் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியாது. – சி.பி.ஐ. விசாரணைக்குப்பின் நிகிதா பேட்டி..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார், நிகிதா என்பவரால் கொடுக்கப்பட்ட நகை திருட்டு புகாரில் மானாமதுரை தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரனை செய்து வருகிறது.
அஜித் குமாரின் மரணம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 15 நாட்களாக மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு தீவிர தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நகை திருட்டு புகார் அளித்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணை கடந்த ஜூலை 23-ஆம் தேதி, மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோரிடம் 3.5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்ட விசாரணைக்காக நேற்று மதியம் 1 மணியளவில், நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் மீண்டும் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சி.பி.ஐ. துணை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முந்தைய விசாரணையில், அஜித் குமார் உயிரிழந்த அன்று கோவில் மற்றும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்திருந்தனர். நேற்று நடைபெற்ற விசாரணையில், நிகிதாவின் நகைகள் மாயமானது உண்மையா? அவர் பொய் புகார் அளித்தாரா.? என்பது குறித்தும், அவர் யாருடன் செல்போனில் பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அவருடன் பேசிய நபர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சி.பி.ஐ. விசாரணையை முடித்து வெளியே வந்த நிகிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பவம் நடந்த நேரத்தில் நடந்ததை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். என்னைப் பற்றி தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லாத நிலையில் இருக்கிறோம். என்ன நடந்தது என்பது தெரியாமல், ஒருவர் மீதே குற்றம்சாட்டி திசை திருப்பப் பார்க்கிறார்கள். பொய்யான தகவல்களை வேகமாக பரப்புகிறார்கள்.” என்று கூறினார்.
மேலும் அவர், “ஒருவர் இறந்தது வேதனையான விஷயம். வேண்டுமென்றே யாராவது அப்படி செய்வார்களா.? நாங்களும் வேதனையில்தான் இருக்கிறோம். காய்கறி, மளிகை பொருள் கூட வாங்குவதற்கு என்னால் வெளியே வர முடியவில்லை. சாப்பிட, பெட்ரோல் போடுவதற்கு கூட வர முடியவில்லை. கல்லூரியிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. உடன் இருப்பவர்களும் தொந்தரவு செய்கிறார்கள்.
நான் தவறு செய்தேனா.? என்பதை ஆய்வு செய்யாமல், கடுமையாக நடந்து கொள்கிறார்கள். என்னவென்றே தெரியாமல் ஏதேதோ பேசுகிறார்கள். சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதைப் பற்றி நாங்கள் எதையும் கூறவில்லை. அது அவர்களின் கடமை. நானும் தற்கொலை செய்து கொண்டால், அதனையும் சமூக வலைத்தளங்களில் போட்டு விளம்பரமாக்கலாம் என பலரும் நினைத்து காத்திருக்கிறார்கள்.
நகை திருட்டு போனதாக புகார் அளித்தோம். அது மட்டுமே நாங்கள் செய்தோம். போலீசார் எடுத்த நடவடிக்கைகள் பற்றி எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டோம். அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நாங்கள் பேசவில்லை. மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நாங்களும், எங்கள் தரப்பு நியாயத்தை கூறுவதற்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.