பாஜகவை ஏற்க தயாராக இல்லை.. உங்கள் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும்
அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து கர்ஜித்த கனிமொழி
காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி நடத்தியது. இதன்பின் இரு நாடுகளுக்கு இடையிலும் தொடர்ந்து, மோதல் நடந்து வந்த நிலையில் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில் மோதல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு, துணைக் குடியரசுத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா, பீகார் விவகாரம் என்று ஏராளமான பிரச்சனைகளுக்காக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த வாரம் நாடாளுமன்றம் முடங்கியது.
தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேசினார்கள். இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் விவகாரம் தொடர்பாகப் பேசுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம் என்று பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், நீங்கள் நினைக்கும் அளவிற்கு நேருவை காங்கிரஸ் கட்சி நினைக்குமா.? என்பது சந்தேகமாக இருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
“பாஜகவை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. உங்களின் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.“
உங்களால் தமிழ்நாட்டில் பெரியார், அம்பேத்கரை படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுவதும் நேருவையும் இளம் தலைமுறையினர் படிக்க தொடங்கிவிட்டார்கள். அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்ற தொனியில் அமித்ஷா பேசியிருக்கிறார். ஆனால் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக முதன்முதலில் பேரணி நடத்தியவர் முதல்வர் ஸ்டாலின். தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பேரணியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட கலந்து கொண்டனர். நாங்கள் இந்த தேசத்தோடு தான் நிற்கிறோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சியைத் தொடரும் என்று அமித்ஷா கூறினார்.
நீங்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்யும் வரை நாங்கள் நாடாளுமன்றத்தில் இருப்போம். தேர்தல் வெற்றி என்பது தேர்தல் ஆணையத்தின் உதவியுடனோ, சிறப்புத் திருத்தம் மூலமாகவோ இருக்கக் கூடாது. ஜனநாயகத்தின் மூலம் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்கத் தூதுக்குழு அமைக்க அவசியம் ஏற்பட்டது ஏன்? நீங்கள் விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர், தீவிரவாத தாக்குதல் நடக்கும் போதெல்லாம் என்ன செய்கிறார்? மும்பை தாக்குதல் நடந்த போது பிரதமரே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் தற்போது நடந்த பஹல்காம் தாக்குதல் பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா?
தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்கிறது? மக்களுக்கு உதவி செய்யும் பொறுப்புகள் அனைத்தையும் மத்திய அரசு, மாநிலங்களின் தலையில் போட்டுவிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும், தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தைக் கண்டறிந்துவிடுகிறது பாஜக. ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தமிழ்நாட்டில் இருந்துதான் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று ஸ்டாலின் பேசுவதை ஏற்க மறுக்கிறீர்கள். கங்கையை வென்றவர் சோழன் என்பதால், அதற்குக் கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் வந்தது. தமிழன் கங்கையை வெல்வான்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் கடந்த பின்னரும், எப்போதோ நடந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைக் குறையாகச் சொல்வதை பாஜகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் தீவிரவாத தாக்குதல் தடுக்காவிட்டாலும் அதில் இருந்து விஸ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்.? அரசியலுக்காக ஏன் நாட்டை பிரித்தாளப் பார்க்கிறீர்கள்.? மதரீதியாக நாட்டில் பிரிவினை உருவாக்குவதுடன் வெறுப்புணர்வையும் பரப்புவது ஏன்.? நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை பிரிக்காதீர்கள்.
சோஃபியா குரேஷியை அவமதித்த அமைச்சர் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்.? ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேட்டியளித்த விக்ரம் மிஸ்திரியின் குடும்பத்தையே மோசமாக விமர்சித்தனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.? பாஜகவை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. உங்களின் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்தியாவின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் டிரம்ப். அவரின் கருத்தை மறுக்காதது ஏன்.? இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கையா.? பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்குக் கூட 2 நாடுகள் ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அண்டை நாடு கூட ஆதரவு தெரிவிக்கவில்லை.. இந்தியாவுக்கு ஒரு நாடு கூட நண்பர் இல்லையா.? இலங்கை அரசுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். வேண்டிய தொழிலதிபருக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருகிறீர்கள் ஆனால் தமிழக மீனவர்கள் மீது மட்டும் தாக்குதல் தொடர்கிறது என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து பேசினார்.