கட்சியின் அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா.? என்று சீவி. சண்முகம் பேசியிருந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை அவரது திண்டிவனம் இல்லத்தில் இன்று சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொவருளாக மாறியிருக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து அவர் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து, செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பினர், இதன்காரணமாக அதிமுக அணிகளுக்குள் பரபரப்பு நிலவியது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்பாக சென்னை வடபழனியில் நடந்த கூட்டத்தில், கட்சியின் அலுவலகத்தை உடைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா.? என்று கேட்டதோடு, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என அழுத்தமாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி கேட்டதைப்போலவே கட்சியின் அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா.? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்தச் சூழலில் இன்று சிவி சண்முகத்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வரும் 27ஆம் தேதி ஓமந்தூரில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதிமுக, பாஜக கூட்டணி குறித்தும், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இணைப்பு உள்ளிட்ட முக்கிய அரசியல் சூழல் குறித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நலன் கருதி சுமூக பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இதனை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார். சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நாகேந்திரன், “இது நட்பு ரீதியான சந்திப்பு. அரசியல் எதுவும் பேசவில்லை. கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நட்போடு இருப்போம்” என தெரிவித்தார்.