
தமிழக காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரியும் திரு.மணிமனோகரன் துறை சார்ந்த பணிகளுக்கு இடையே தன்னை கல்விப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டு, ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நின்று, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் நல்ல கல்வியை பெற்று சமூகத்தில் தகுதியான இடத்திற்கு வரவேண்டும் என்ற சிந்தனையுடன் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் கட்டணமில்லா கல்வி அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார்.
கல்விச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மாணவர்களுக்கான அனைத்து செலவையும் தனது சொந்த செலவில் செய்து வருகிறார். மாணவர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக்கூடாது என்று அவர்களிடம் கலந்துரையாடி சிறப்பு வகுப்புகளையும் எடுத்து வருகிறார். அவரது இந்த கல்விப்பணிக்கு உறுதுணையாக நின்று செந்தில்குமார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனராக அவரது மனைவி திருமதி. ஜெயலட்சுமி மணிமனோகரன் கல்விச் சேவையை செயல்படுத்தி வருகிறார்.
கல்விச் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்தோடு நின்றுவிடாமல், தங்கள் வாழும்பகுதியில் பசுமை புரட்சி ஏற்படுத்தும் வகையில் காடுகளை உருவாக்கும் நோக்கில், அப்பகுதி மக்களுக்கு இலவசமாக ஒவ்வொரு வீட்டிற்கும் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டதில் பட்டரைப் பெரும்புதூர், நாராயணபுரம் மஞ்சாக் குப்பம் ஆகிய கிராம மக்களுக்கு தனது அறக்கட்டளையின் சார்பில் இலவசமாக கிட்டத்தட்ட 5000 மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர். இந்த மரம் வளர்ப்பின் வாயிலாக அவர்களுக்கு வருவாயும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கொய்யா மற்றும் விலையுயர்ந்த சந்தன மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறார்.
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் அப்பகுதி மக்கள் சந்தோஷத்துடன் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டதோடு ஆய்வாளர் மணி மனோகரனின் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளையின் சேவையை பாராட்டிசென்றதை காணமுடிந்தது.

