தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் தீண்டாமை குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அரசுப்பள்ளியிலேயே பழங்குடி இன மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து தீண்டாமை கொடுமையை நிறைவேற்றி அகம் மகிழ் ந்திருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி. தலைமை ஆசிரியரின் நடவடிக்கை கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், இச்சம்பவம் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு இவர்மீது எடுத்த நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
கோவை தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், மாணவர்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த புகாரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான அநீதிகள் நடைபெற்று வருகின்றன. தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வருகை பதிவேட்டின் வரிசைப்படி தினமும் காலை 2 மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.
பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் நாள்தோறும் காலை, மாலை என 2 வேளைகளும் இந்த 5 மாணவா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா். பட்டியல் சமூக மாணவர்கள் மட்டும் தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழை வழங்கி பள்ளியில் இருந்து விரட்டி விடுவேன் என்றும் தலைமை ஆசிரியா் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இத்தகைய தீண்டாமை சார்ந்த செயல்பாடுகள் நடந்து உள்ளதாக எங்களுக்கு தெரிய வருகிறது. இது கல்வி உரிமைகளுக்கு எதிரானது.
சட்டரீதியான நடவடிக்கை எனவே மாணவர்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் மீது சட்டரீதியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளா் மற்றும் பாதுகாவலா் பணியிடங்களை உடனடியாக வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக அந்த பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரியை, கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரம் கோனார்பாளையம் அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நான்கு வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் நடந்தேறிய “தீண்டாமை” கொடுமை வெட்கக்கேடானது என்று சமூக ஆர்வல்கள் வேதனை தெரிவிப்பதோடு, இச்செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரிக்கு பணியிட மாற்றம் தான் தண்டனையா.? மற்ற ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

