பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இருவருக்கும் கட்சி ரீதியாக ஏற்பட்ட மோதலில் அன்புமணி நீதிமன்றதிற்கு சென்று பொதுக்குழு நடத்த அனுமதி பெற்றார். இந்நிலையில் மாமல்லபுரத்தில் கடந்த சனிக்கிழமை பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில், அன்புமணியின் தலைவர் பதவியை மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்கு அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை பாமகவின் மகளிர் மாநாட்டை ராமதாஸ் பூம்புகாரில் நடத்தினார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது என்று குற்றம்சாட்டி, அவர்மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க பாமகவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார், தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பு அனுப்பிய கடிதத்தில், அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்த நிலையில், நிறுவனரான தனது, ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாமக தலைவரின் பதவிக்காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது அதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அன்புமணியின் நடவடிக்கைகள் பாமகவின் அரசியல் சூழலையே பாழாக்கும் வகையில் உள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். அன்புமணி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உளவுத்துறைக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு புகார் கடிதம் அனுப்பி உள்ளது.
Related posts
Click to comment