ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தி ஜனநாயக கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை நொறுக்கி தள்ளியிருக்கிறது தேர்தல் ஆணையம். இது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத விஷயம். ஜனநாயகத்தை மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தை கட்டமைப்பதில் வாக்காளர்களின் பங்கு அளப்பறியது அந்த வாக்காளர்களின் வாக்குகளை அரசியல் ஆதாயத்திற்காக திருடி வாக்காளர்களின் நம்பிக்கையை சூறையாடியிருக்கிறது தேர்தல் ஆணையம். சொந்த நாட்டிலேயே குடிமக்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரோடு இருக்கும் போதே, அவர்களை ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கொன்றுள்ளது.?
இந்த வாக்குத் திருட்டு குறித்து கேள்வி கேட்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ,ஜனநாயக நாட்டின் தேர்தல் ஆணையம் சர்வாதிகாரப் போக்குடன் பதிலளித்துக் கொண்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டிய தேர்தல் ஆணையம் நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அழித்துவிட்டதாக கூறுவது நகைப்புக்குறிய செயலாக இருக்கிறது.
தேர்தலை முறையாக நடத்தி மக்கள் விரும்பும் ஆட்சி உருவாக நடுநிலையோடு, செயல்டவேண்டிய ஆணையம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் படுபாதக செயலே தவிர வேறொன்றும் இல்லை.
தேர்தல் ஆணையம் ஆளும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக நின்று, ஒரு மாநிலத்தில் வாக்கு திருட்டை நடத்துவது எத்தனை அயோக்கியத்தனமானது. ஒரே முகவரியில் பல வாக்காளர்களை போலியாக சேர்த்திருப்பது.? வாக்குகளை பறிக்கும் நோக்கில், உயிரோடு இருப்பவர்களையே இறந்துவிட்டதாக கணக்கு கட்டப்பட்டிருப்பது.? என்று மோசடிகளுக்கு மேல் மோசடிகளை தேர்தல் ஆணையம் நிகழ்த்தியிருக்கிறது. இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம், இதற்கு முன்பு தனது தலைமையில், நடத்திய தேர்தல்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்.? என்ற சந்தேகம் தானாகவே எழுகிறது.
மத்திய அரசின் பல துறைகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக ஆக்கப்பட்டு ஜனநாயக விரோதப்போக்கில் செயல்டுவது விமர்சிக்கப்படுவது ஒருபுறம் அறங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில், மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தங்களது கட்சி வலுவிழந்து நிற்கும் மாநிலங்களில், தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்கு திருட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பது தான் நிதர்சன உண்மை.
இந்த மோசடிகளுக்கான ஆதாரங்கள் அடுக்கப்பட்டிருக்கிறது. இறந்ததாக கூறப்பட்ட பல வாக்காளர்கள் உச்சநீதி மன்றத்தில் சாட்சிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த முறைகேட்டிற்கான சாட்சிகள் மட்டுமல்ல. இனி தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று, ஒட்டு மொத்த இந்திய மக்களின் சார்பாக நிறுத்தப்பட்ட சாட்சிகள். உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் வழங்கப்போகும் தீர்ப்பை நாடே எதிர் நோக்கியுள்ளது.
ஒரு வலுவான சுயாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு மிரட்டலுக்கு பயந்து இத்தகைய வாக்கு திருட்டில் ஈடுட்டிருக்க வாய்ப்பில்லை. இதன் பின்னனியில் படுபயங்கர ‘’குதிரை பேரங்கள்’’ நடந்திருக்கக்கூடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் சர்வாதிகார திமிரை காட்டியுள்ளது. தேர்தல் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையற்று நிற்கின்றனர். மக்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் நோக்கில்தான் வாக்குசாவடிக்கு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்குச்சாவடிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே சிதறடித்திருக்கிறது.
மக்களாட்சியில் ஓட்டு என்பது ஒரு குடிமகனின் அதிகார உரிமை. ஆனால், ‘’ஓட்டு உங்கள் கைகளில் இருக்கலாம். ஆனால் நீங்கள் வாக்காளர்களே அல்ல என்று தூக்கியெறிந்து உங்கள் வாக்குகளை பறிக்கும் அதிகாரம்’’ எங்கள் கைகளில் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் மக்களின் மனதில் விரக்தியை திணித்திருக்கிறது. இப்படியான மோசடிகளை தேர்தல் ஆணையம் செய்யுமானால், மக்கள் தேர்தல் மற்றும் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கையற்று போகும் சூழலை உருவாக்கிவிடும். இது ஜனநாயகத்திற்கு பேராபத்தாகிவிடும்.
குடியுரிமை விவகாரத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோத குடியுரிமை பெற்றிருந்தால் அவர்ககளை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து வெளியேற்றுங்கள். அதை காரணமாக காட்டி, அரசியல் சுயலாபத்திற்காக அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி குடியுரிமை பிரச்னையை காரணம் காட்டி வாக்குத் திருட்டில் ஈடுபடுவது முறைகேடு அல்லவா.? குடியுரிமை பற்றி பேச தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டா.? ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் சரிபார்பை நடத்தி வாக்குரிமையை வழங்குவதுதானே தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்க முடியும்.?
வாக்காளர் தீவீர சரிபார்ப்பு என்ற பெயரில் தேர்தல் ஆணையம் நடத்திய முறைகேடுகள் நாடாளுமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடும் சூழலை ஏற்படுத்தி ஜனநாயகத்தை தலைகுனிய வைத்துள்ளது.
சுதந்திர வரலாற்றில் இது போன்ற முறைகேட்டை நாம் பார்த்ததில்லை. உச்சநீதி மன்றம் இதுவரை தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சீர்திருத்தத்தை முழுவதுமாக செல்லாததாக அறிவித்து, முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்
அனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தி ‘’ஒரு வாக்காளரின் வாக்குகூட பறிபோகவில்லை’’ என்ற உறுதியை பெற்ற பின்னரே, தேர்தல்களை நடத்த உத்தரவிடவேண்டும். அதுவரை தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும்
முறையான வாக்காளர்கள் இன்றி திருட்டு ஓட்டு மூலம் தேர்தல் நடத்துவது ஜனநாயகப் படுகொலையே அன்றி வேறல்ல..
-ஆசிரியர்
Related posts
Click to comment