தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் சென்னைவாசிகள் இயல்பு வாழ்க்கை குறித்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் பருவமழையின் போதும் ஏற்படும் பேரிடர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி தவிக்கவிட்டு விடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்த வருடம் எவ்வளவு மழை வந்தாலும் அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த சூழலில், பருவமழை தொடர்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆய்வுகளின் அடிப்படையில், நடந்துள்ள பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
குறிப்பாக, பழுதடையும் சாலைகளை உடனுக்குடன் சரி செய்யவும், மின்சார பாக்ஸ்கள், கேபிள்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இயற்கைச் சவாலை கூட்டுமுயற்சியுடன் எதிர்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று தனது சமூக வலைதளப்பதிவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.