முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு.? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை முடக்கியது யார்.? என்ன செய்கிறார்.? அபாய்குமார் சிங் ஐ.பி.எஸ்


திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச வழிப்புத்துறையை தன்னிச்சையாக செயல்படவிடுவோம்.! என்று அப்போதைய சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 5 வருடங்கள் முடியப்போகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலும் வந்துவிட்டது. அன்று மு.க.ஸ்டாலின் கூறியதைப்போல் லஞ்ச ஒழிப்புத்துறை தன்னிச்சையாக செயல்பட விடப்பட்டதா.? தன்னிச்சையாகத்தான் செயல்படுகிறதா.? லஞ்ச ஒழிப்புத்துறை என்னதான் செய்து கொண்டிருக்கிறது.?

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையப்போகிறது இந்த 5 ஆண்டுகளுமே லஞ்ச ஒழிப்புத்துறை தூங்கிக்
கொண்டிருந்ததா.? கோமாவில் இருக்கிறதா.? என்ற கேள்வி எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கிறது. அபாய்குமார் சிங் ஐ.பி.எஸ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்று கொண்ட நாள் முதலே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டதாக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து ஊடகங்கள் சமூக ஊடகங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்த போதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அவற்றை கண்டுகொள்ளவில்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணமே இருக்கிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கைகள் இல்லை. மாவட்ட அளவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகங்களும் அதிகாரிகளும் முடங்கியே கிடக்கின்றனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இத்தகைய நடவடிக்கைகள் ஊழலை ஊக்கப்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இன்றைய முதலமைச்சர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தன்னிச்சையாக செயல்படும் என்று கூறியதை ஏன் செயல்படுத்தவில்லை.? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையின் மெத்தனப்போக்கை பார்க்கும் போது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.

கடந்த ஜனவரி 1, 2023 முதல் ஜூன் 1, 2025 வரை தமிழகம் முழுவதிலிருந்தும் 21,660 புகார்கள் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநகரத்திற்கு சென்றுள்ளது. இதில் வெறும் 45 புகார்களை மட்டுமே விசாரணக்கு எடுத்து கொண்டிருக்கிறது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை. கிட்டத்தட்ட 21,615 புகார்கள் மீது விசாரணை நடத்தப்படாமலேயே கைவிடப்பட்டிருக்கிறது. அதிலும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 45 புகார்களில் 2 புகார்களுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களில் உண்மைத்தன்மை இல்லையா.? அந்த புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டதா.? புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகள் அலுவலகங்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையால் கண்காணிக்கப்பட்டதா.? இவையனைத்தும் மர்மமாகாவே இருக்கிறது.

ஜூன்,2025-ல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தமிழ்நாடு அரசு அலுவலங்களில் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குறை களைவு மனு பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு பொருந்துமா.? விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதா.? பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.? இப்படி பல கேள்விகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை முன் நிற்கிறது.

இந்நிலையில் தான், திடீரென தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மீது ரெய்டு பாய்ச்சல் நடத்தியிருக்கிறது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை. இந்த ரெய்டு நடத்தாமல் இருந்திருந்தால் கூட விமர்சனங்களில் இருந்து தப்பியிருக்கலாம் ஆனால் குறைந்த வருவாய் உள்ள அலுவலகங்களை குறிவைத்து பெயரளவில் ஒரு ரெய்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நடத்தியிருக்கிறது. அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 37 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் திடீராய்வு மேற்கொண்டு கணக்கில் வராத 37,74,860 ரூபாய் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 55,210 ரூபாய், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 25,350 ரூபாய், தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 71,000 ரூபாய், ஈரோடு மாவட்டம் கீழ் பவானி நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்திற்கு 3.50 லட்சம் பணத்துடன் வந்த ஒப்பந்ததாரர் மடக்கி பிடிக்கப்பட்டு நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் குமரேசனிடம் விசாரணை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரப்போக்குவரத்துதுறை அலுவலகத்தில் 52,000 ரூபாய், வத்தலக்குண்டு வட்டாரப்போக்குவரத்துத்துறை அலுவலகம் அருகே உள்ள வாகன புகை பரிசோதனை மையத்தில் இருந்த உச்சபட்டியை சேர்ந்த பாண்டியராஜ் சிலுக்குவார் பட்டியை சேர்ந்த அஜய் ஜான்சன் ஆகிய இரு புரோக்கர்களை மடக்கி 1,12,220 ரூபாயை கைப்பற்றி, மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோவனிடம் விசாரணை, இப்படி 37 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் திடீராய்வு மேற்கொண்டு ஊழல் அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவதுள்ளனர். இந்த அலுவலகங்கள் அனைத்துமே அரசுக்கான வருவாய் ஈட்டுவதில் முன்னணியில் உள்ள அலுவலகங்கள் இல்லை. அதுமட்டுமின்றி ஊழல் வருவாயும் அதிக அளவில் இல்லாத அலுவலகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் கண்துடைப்பு நடவடிக்கை என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது. சென்னையில் கே.கே. நகர் வளசரவாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், அண்ணாநகர், மீனம்பாக்கம், தாம்பரம், திருவான்மியூர், அயனாவரம்,வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் சென்னையில் உள்ள பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்களில் தினந்தோறும் நடக்கும் ஊழல் முறைகேடுகள் கொஞ்சநஞ்சமல்ல.

அதேபோல தஞ்சாவூர் போக்குவரத்துத் துணை ஆணையர் அலுவலகம், தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருச்சி ஸ்ரீரங்கம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், திருச்சி லால்குடி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் திருச்சி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், திருச்சி மாநகராட்சி அலுவலகம், கரூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் , பெரம்பலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, மாயவரம், சீர்காழி, திண்டிவனம், சிதம்பரம், வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள் சார் பதிவாளர் அலுவலகங்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள் என அதிகமாக லஞ்சம் தலைவிரித்தாடும் அலுவலகங்களில் ஏன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் திடீராய்வு மேற்கொள்ளவில்லை என்ற கேள்விகக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் திரு.அபாய்குமார் சிங் ஐ.பி.எஸ். அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று இந்த துறைகளை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தமிழகமெங்கும் அரசு அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. சிறிதும் அச்சமின்றி பொதுமக்களிடம் வெளிப்படையாகவே கை நீட்டுகின்றனர். கைகட்டி வேடிக்கை பார்க்கிறது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. பொதுமக்கள் அனுப்பும் புகார்கள் குறித்து ஆய்வு செய்து புகாருக்கு உள்ளான அலுவலகங்கள் அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் பொறுப்பு.?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தன்னிச்சையாக செயல்படும் என்று கூறியிருந்தார். தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தன்னிச்சையாக செயல்படுகிறதா.? அல்லது தன்னிச்சையாக செயல்படவிட்டாமல் முடக்கப்பட்டிருக்கிறதா.? அல்லது தானாகவே முடங்கி கிடக்கிறதா.? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா.?


banner

Related posts

டெல்லி பாஜக தலைவர்கள் கூட்டம்: கல்யாண நிகழ்ச்சிகள் இருக்கு.! அதனால் டெல்லி போகவில்லை.!!! – அண்ணாமலை

Ambalam News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு..

Ambalam News

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் – கமல் கண்டனம்.!

Admin

Leave a Comment