உங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” வஞ்சிநாதன்.. வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புவதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தின் விவரங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா அமர்வுக்கு அனுப்புவதாகவும், வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து, தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி மத பாகுபாடுகளுடன் நடந்துகொள்கிறார் என சமூக செயற்பட்டாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த புகாரில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எந்தெந்த வழக்குகளில் எல்லாம் ஜாதி, மத அடிப்படையில் அவர் தீர்ப்பளித்திருக்கிறார் என்கிற விவரங்களையும் இணைத்து அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடிதம் வாட்ச்அப்பில் கசிந்த நிலையில், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தனது அமர்வு முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது வாஞ்சிநாதனிடம் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் நேரடியாக, “எனது நீதி பரிபாலனை சாதி, மத ரீதியாக உள்ளதாக இப்போதும் சொல்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன், “குற்றச்சாட்டு எது என குறிப்பிட்டு கூறினால் பதிலளிக்கிறேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, 28 ஆம் தேதியான இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும். அப்போது எழுத்துப்பூர்வமான கேள்விகள் வழங்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் நேற்று, (ஜூலை 28) நீதிபதிகள் ஜி.ஆர்சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பு விசாணைக்கு ஆஜரானார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வாஞ்சிநாதன் அளித்த பேட்டி ஒன்றின் வீடியோவைக் காட்டி, அதன் தலைப்பை படிக்குமாறு கூறினார் அதை படிப்பதற்கு தடுமாறிய வாஞ்சிநாதனை பார்த்து, “சத்தமா படிங்க.. கண்ணு தெரியலையோ? அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணுமா? கண்ணாடி மாத்தணுமா?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
இதையடுத்து வாஞ்சிநாதன், “நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்து அதனை தாக்கல் செய்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டு எந்த நிலையில் உள்ளது என்பதில் எனக்குத் தெளிவில்லை. நீங்கள் கேட்பது கேள்விக்கு தொடர்பானதாக இல்லை. அதனை எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. வீடியோவை பார்த்து என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை. உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், “நான் விசாரிக்கவில்லை. நீங்களாக அப்படி நினைத்துக்கொள்கிறீர்கள். உங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் அளித்த புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் கூறுகிறது. அதுவும் அந்த வழக்கில் வந்ததால் தான் புகார் குறித்து உங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
நீங்கள் கடந்த நான்கு வருடமாக என் மீது குற்றம்சாட்டி வருகிறீர்கள். நான் இதுவரை உங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் என்னுடைய தீர்ப்பை விமர்சிப்பதற்கு 100 சதவீதம் உரிமை உள்ளது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால், சாதி, மத பாகுபாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றஞ்சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புவதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தின் விவரங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா அமர்வுக்கு அனுப்புவதாகவும், வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து, தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நீதிபதியோ, அதிகாரியோ, யாவராயினும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தானே விசாரித்து நீதி வழங்கிக்கொள்ள முற்படுவது நியாயமா.? புகாரின் பேரில் விசாரணை நடைபெறும் போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிரூபித்துவிட்டு செல்லலாமே.? எதற்காக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பின்னர் ஏன் அந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்ற வேண்டும்.? இப்படியான கேள்விகளும் கருத்துக்களும் பொதுவெளியில் பேசு பொருளாகியிருப்பது நீதித்துறையின் மாண்பை சீர்குழைக்காதா.?
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அனுப்பிய புகாரின் மீது, தலைமை நீதிபதி தாமதமின்றி விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றுமா.?
-அம்பலம் செய்திக் குழு