அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது சுற்றுப்பயணங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேவையின்றி கூட்டத்தை கலக்கும் நோக்கில் கூட்டத்திற்குள் வருவதாக கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே மிரட்டினார். அடுத்ததாக, துறையூர் அருகே அதிமுக கூட்டத்திற்குள் வந்த ஆம்புலன்ஸை தடுத்தி ஓட்டுனரை அதிமுகவினர் தாக்கிய சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல, நேற்று முன் தினம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன், காரியாபட்டி திமுக சேர்மன் செந்தில் என்பவரின் சகோதரர் சௌந்தருக்கு சொந்தமான கார் கூட்டத்திற்குள் நுழைந்தது. மாற்றுப்பாதையில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியும், கார் கூட்டத்திற்குள் உள்ளே சென்றதால், அதிமுகவினர் காரைத் தடுத்து கண்ணாடியை உடைத்தனர். மேலும் வேண்டுமென்றே திமுகவினர் கூட்டத்திற்குள் காரை இயக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினன் குற்றம்சாட்டியுள்ளனர்.
உடல்நிலை சரியில்லாத சிறுவனை மருத்துவமனைக்கு அல்ழைத்துச்சென்ற போது அதிமுகவினர் காரை மறித்து தாக்கியதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் அந்த வாகனத்தை இயக்கி வருவது பதிவாகியிருக்கிறது.
உடல்நிலை சரியில்லாத சிறுவனை மருத்துவனைக்கு அழைத்து செல்வதற்காகதான் கூட்டத்திற்குள் கார் வந்ததாக கூறப்பட்ட நிலையில், உடல்நிலை சரியில்லாததாக கூறப்பட்ட சிறுவனே ஓட்டி வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
காரை சிறுவன் இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறுவன் இயக்கினாரா.? என காரியாபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.