
தமிழகத்தில் அரசுப் பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. அரசு பள்ளிகளை கட்டும் ஒப்பந்ததாரர்கள் முறையாக கட்டிட பணிகளை செய்யாமல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாலேயே இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பொதுமக்களின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இராமநாதபுரம் சாயல்குடி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் காயமடைந்தது, செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகாம் அடுத்த புதுப்பட்டு நடுநிலைப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், பயன்பாட்டிற்கு வந்த மூன்றே மாதத்தில், அந்த வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவ மாணவியர் படுகாயமடைந்தது, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே கூகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஓர் ஆண்டிற்குள்ளேயே இடிந்து விழுந்தது, அந்த வரிசையில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிங்களாந்தபுரம் ஒன்றிய துவக்கப்பள்ளியில், நேற்று காலை வகுப்பறைகள் திறக்கப்பட்டபோது, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடக்கும் அறையின் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்ததான் காரணமாக மானவர்களின் இருக்கைகள் கல்வி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில், ₹30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, பள்ளி திறப்பதற்கு முன்பாக இது நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை.
இந்தப் பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? என்ன அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? என்பதை விசாரிப்பதோடு, இடிந்து விழும் பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட, இந்த திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களுக்குக் கணக்கே இல்லை. திமுக நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, நமது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. அதுவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை என்று, பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இவ்விசயத்தில் அரசு கட்டிடங்கள் என்றாலே அது அபாயகரமான கட்டிடம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ஆகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்