ஏதே..? விஜய் தலைமையில் மூணாவது கூட்டணியா.!? அட என்னய்யா சொல்ற.?



2026 சட்டமன்ற தேர்தலில் மும்முனைப்போட்டி உருவாகும் விஜய் மூன்றாவது கூட்டணியை உருவாக்குவார் என்றபடியே வந்து அமர்ந்தார் ‘’சிலேடு சிங்காரம்’’!
இதைகேட்டதும் கடுப்பான ‘’கடுப்பு கந்தசாமி’’ ஏதே..விஜய் தலைமையில் மூணாவது கூட்டணியா.? அட என்னையா சொல்ற என்னயா சொல்ற நீ.? கூட்டணியையும் உருவாக்க முடியாது. தனி அணியும் உருவாக்க முடியாது. அத மொதல்ல தெரிஞ்சுக்க. விஜய் தலைமையில் கூட்டணிக்கு வர்றவங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குன்னு சொல்லி இருக்காரு ஆனா அதுக்காக இவங்க கூட எப்படி கூட்டணி வைப்பார்.? சிறுவாணி தண்ணிமாதிரி சுத்தமான ஆட்சிய கொடுப்போம்ன்னு சொன்னவராச்சே,.!
அதுமட்டுமில்ல, சசிகலா, TTV.தினகரன், ஒபிஎஸ், செங்கோட்டையன், இவங்க இதுவரை தங்களோட அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்காம ‘’இலவு காத்த கிளி’’ யாக எதையோ.? எதிர்பார்த்து காத்துக்கிடக்காங்க அத வச்சு விஜய் கூட்டணிய உருவாக்குவார்ன்னு சொல்றியே.? இது நடக்குமா.? அவங்க டார்கெட் அதிமுகக்குள்ள போகணும் எடப்பாடியாரை வெச்சு செய்யனும் அவ்ளோதான்..விஜய் கூட போனா.? அதிமுகவில் இவர்களை சேர்த்துக்கொள்ள எடப்பாடியாரிடம் கோரிக்கை வைக்கும் அதிமுக தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்.?
நாம ஒரு விசயத்த மறந்துற கூடாது, எடப்பாடியாரின் மூவ் வேறுமாதிரியாக இருக்கிறது,! பாராளுமன்ற தேர்தல்ல தவெக போட்டியில்லைன்னு விஜய் அறிவிச்சதோட, ‘’2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு’’ ன்னு கூறியிருந்தார். இந்த அறிவிப்பு அப்ப யாருக்கு நிம்மதிய கொடுத்துச்சோ.? இல்லியோ.? எடப்பாடி பழனிச்சாமிக்கு நிம்மதிய கொடுத்துச்சு.. மும்முனை போட்டி இல்லை.. விஜய் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை என்பதால் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி தைரியமாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். ஆனா அந்த தேர்தல திமுக அலை அதிமுகவ சுருட்டி போட்டுருச்சு..
ஆனால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் களத்தில், கூட்டணியின்றி விஜய் தனியாக களமிறங்கப்போவதை முன்பாகவே தெளிவாக அறிந்து கொண்ட எடப்பாடியார் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். ஒட்டுக்காக தொண்டர்களுக்காக அமைத்துக் கொண்ட கூட்டணி அல்ல இது.
சட்டமன்றதேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முரண்டு பிடித்தால், சசிகலா, டி‌டி‌வி.தினகரன், ஒபிஎஸ், எடப்பாடியாருக்கு எதிரான முக்கிய அதிமுக பிரமுகர்களை ஒன்று சேர்த்து அவர்கள் தலைமையில், ஒரு அணியை உருவாக்கி அதிமுகவுக்கு, பாஜக தலைவலியை கொடுத்து விடும். அதுமட்டுமல்ல தேர்தல் பரப்புரையில் நெருக்கடி கொடுத்து திணறடித்து விடுவார்கள். அப்படி ஒரு சூழல் அமைந்தால் அது திமுகவுக்கு வலு சேர்த்து விடும், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக என்று போர்க்கொடி தூக்குவார்கள். அவர்கள் கை ஓங்கிவிடும் என்பதை அறிந்துதான் தனது உட்கட்சி எதிரிகளின் அரசியலை காலி செய்வதற்காக பாஜகவுடன் நேசக்கரம் நீட்டினார்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் ஜெயிக்குறமோ.? தோற்கிறமோ.? சசிகலா, டி‌டி‌வி தினகரன், ஒபிஎஸ், மற்றும் தனக்கு எதிரான மனநிலை கொண்டவர்களை வளரவிடாமல், இந்த தேர்தலோடு அவர்களது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்ற அரசியல் தொலைநோக்குப் பார்வையில் போடப்பட்ட கூட்டணிதான் பாஜக – அதிமுக கூட்டணி, அதுமட்டுமா.? தமிழகத்தில் அதிமுகவின் முக்கிய எதிரியான பாஜக அண்ணாமலையின் கொட்டத்தை, தேர்தலுக்கு முன்னரே அடக்கியாக வேண்டும் என்ற இக்கட்டான நிலை வேறு, எல்லாவற்றையும் மனதில் வைத்துதான் எடப்பாடியார் இந்த கூட்டணியை அமைத்தார்.
இதுல பியூட்டியான விஷயம் என்னன்னா.? அண்ணாமலையை, அதிமுகவுக்கும் எடப்பாட்டியாருக்கும் எதிராக கடுமையாக விமர்சனம் செய்து பேசவைத்து ஆதாயம் அடைந்த அமித்ஷா தான் எடப்பாடியாரை விட, பலே கில்லாடி. நினைத்தது போலவே கூட்டணி அமைந்தவுடன் அண்ணாமலையை சைலன்ட் மோடுக்கு அனுப்பிவிட்டார். லைட்டா பிசிறு தட்டிய நிலையில், நிர்மலாசீத்தாராமனிடம் அண்ணாமலையை கிழிக்கசொல்லி உத்தரவிட்டிருக்கிறார். இதனால்தான் அண்ணாமலை பதுங்கியதோடு, அண்ணன் எட்டப்பாடியாரை முதல்வராக்குவோம் என்று கூவுகிறார்.
சசிகலா டி‌டி‌வி தினகரன் ஓபிஎஸ் செங்கோட்டையன் இவங்க தானியா போட்டி அதிமுக ஆரம்பிச்சா என்ன பண்ணுவாராம்.? என்று கேட்ட சிலேடு சிங்காரத்திடம்…
போட்டி அதிமுக அமைக்க அவங்க முதல்ல தயாரா இருக்கணும். ஆனா அவங்க அதிமுகவில் இணைவதையே டார்கெட்டாக வைத்துக்கொண்டு அரசியல் பண்றாங்க அதிமுகவை விடுத்து இவர்களால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் எடப்பாடியார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இவர்களை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற்றும் வேலைகளை முன்னெடுத்து வருகிறார் எனக்கின்றனர் அதிமுக முக்கியஸ்தர்கள்.
இத அறிந்துதான் பாஜகவிடம் இருந்து டிசம்பருக்குள் ஏதாவது அறிவிப்பு வருகிறதா.? என்பதை பொறுத்து முடிவெடுக்கலாம் என்று இவர்கள் காத்திருக்கின்றனர். அதை மனதில் வைத்துதான் டிசம்பருக்குள் தெரிவிப்போம் என்று டி‌டி‌வி தினகரன் கூறியிருக்காரு.
இவர்களை கூட்டணியை விட்டு வெளியேற்றினால், அரசியல் களத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு திணறடிப்பார்கள். அது திமுகவுக்கு பலம் சேர்த்து விடும் என்பது பாஜகவின் கணக்கு. எடப்பாடியார் தொடர்ந்து பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் கடைசி வரை எடப்பாடியாரின் கோரிக்கைகளை பாஜக கண்டுகொள்ளாது. அவர்களை பொறுத்தவரை அனைவரையும் வைத்துக்கொண்டு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் சேர்த்து திமுகவுக்கு தேர்தலில் டஃப் ஃபைட் கொடுத்து திணறடிப்பது தான் டார்கெட்.
ஏற்கனவே விஜய்யால் அதிமுக ஓட்டு சிதறும் என்பது உறுதியாகி இருக்கு. இந்த நிலையில மூணாவது அணி அமைக்கும் வாய்ப்பை எப்படி பாஜக உருவாக்கும்.? அப்புறம் எப்படி மூணாவது, நாலாவது அணி அமைக்குறது./ அதுவும் விஜய் தலைமையில்.?
அப்ப பாஜக டி‌டி‌வி தினகரனை கழட்டி விட மாட்டாங்களா.? என்ற சிலேடு சிங்காரத்திடம்..
நிச்சயமா நடக்காது. அதை அவர்களும் விரும்பவில்லை. ஆனால், கொள்ளைபபுற வாசல் வழியாக சில பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல்கள் வருவதேன்னவோ உண்மைதான்.? தினகரன் செயல்பாடுகளை எப்பவும் நம்பமுடியாது அதில் ஏகப்பட்ட உள்ளடிகளும் இருக்கும்,? இது வேறு மாதிரியான அரசியல் அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது சிலேடு சிங்காரம்.
எதுக்கு வதந்திய கிளப்புற கொஞ்சம் பொறுமையா இருய்யா..என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று சொல்லிவிட்டு, அதிமுக பணப்பட்டுவடா பண்றாங்கலாமே.? என்று கேள்வியெழுப்பிய கடுப்பு கந்தசாமியிடம், விசாரிச்சு சொல்றேன் இப்ப நான் கிளம்புறேன், என்று கிளம்பினார் சிலேடு சிங்காரம்


banner

Related posts

வாக்கு திருட்டு விவகாரம் : பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

Ambalam News

சிறுமிக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு கைது.. சிறுமியின் தாயும் உடந்தை

Ambalam News

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.? அரசியல் கட்சிகள் மத்தியில் பரபர..!

Ambalam News

Leave a Comment