அதிமுகவிற்குள் எழுந்த மோதல்களுக்கு பின் ஓபிஎஸ் அடிக்கடி டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை அவ்வப்போது சந்தித்து பேசி வந்தார். ஒபிஎஸ் உடனான சந்திப்பை ஒருபோதும் பாஜக தலைவர்கள் புகக்கணிக்கும் வகையில் நடந்து கொண்டதில்லை. பாஜக தலைவர்களிடம் செல்வாக்கும், நெருக்கமும் அவருக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறலாம்.
அதேபோல, தமிழ்நாட்டிற்கு வரும் பாஜக தலைவர்களை எவ்வித தடையுமின்றி ஒபிஎஸ் சந்தித்து பேசி வந்தார். அந்த நெருக்கத்தை உடைத்து ஒபிஎஸ் ஸை அரசியலில் தனிமைப்படுத்தியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைவர்கள் பேசிவந்தனர். அதிமுக தொண்டர்கள் இந்த முடிவை ஆராவாரமாக வரவேற்றனர். பாஜக மற்றும் அதிமுகவினர் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டனர். ஆனால் தற்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது.
அதே சமயத்தில், ஓபிஎஸ் பாஜகவை ஆதரித்தார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார். நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால் ஒபிஎஸ் வெற்றி பெறுவார் என்று பாஜக கணக்கிட்டது.வெற்றி பெற்றிருந்தால் அவரை வைத்தே அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று பாஜகவின் திட்டம் தவிடுபொடியாகி விட்டது.
அதேபோல அந்த தேர்தலில் ஒபிஎஸ் வெற்றிபெற்றிருந்தால் பாஜகவை வைத்தே அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம். இணைப்பை நடத்தி ஒற்றை தலைமை என்ற அஸ்திரத்தை கையிலெடுத்து, அதிமுகவை கைப்பற்றலாம் என்ற ஒபிஎஸ்ஸின் திட்டமும் தவிடு பொடியாகி விட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் தங்களது கூட்டணியை அமித்ஷா அறிவித்தார். அப்போது ஏற்கனவே கூட்டணியில் இருந்த யாரும் அந்த நிகழ்வில் இடம் பெறவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மட்டுமே இருந்தனர். ஒபிஎஸ் முற்றிலுமாக கழட்டி விடப்பட்டார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அறிவிப்பு வெளியான பின்னர் தமிழ்நாட்டிற்கு அமித்ஷா மீண்டும் வந்தார். அப்போதும் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவில்லை. ஆனால் ஒபிஎஸ் பாஜக கூட்டணியில் இருப்பதாகவே கூறி வந்தார்.
அதே சமயத்தில், சமீபத்தில் ஒபிஎஸ் தினகரன் சசிகலா போன்றோர் பஜாக கூட்டணியில் இருப்பதாகக்கூட தெரியவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், தான் தனித்து விடப்பட்டு விட்டோம் என்பதை அறிந்தே அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஒபிஎஸ் சில முடிவுகளை எடுத்து வைத்திருந்ததாகவும் அந்த முடிவுகள் குறித்து பாஜக தலைமைக்கு தகவல் சென்றுள்ளதாகவும், அதே சமயத்தில் இதற்கு பின்னனியில் எடப்பாடி பழனிச்சாமியின் காய் நகர்த்தல் இருப்பதாகவும் இதன் காரணமாகவே பாஜக ஒபிஎஸ்ஸை முழுவதுமாக புறக்கணித்து விட்டது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி ஒபிஎஸ் கேட்டிருந்தார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். முன்னதாக, அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை அதிமுக சார்பில், இபிஎஸ், வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். ஆனால், ஓபிஎஸ்க்கு மட்டும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக இறங்கியிருப்பதாக அதிமுக உள்விவகாரங்களை அறிந்தவர்கள் கூறுகின்றனர். பாஜக கூட்டணியில் ஒபிஎஸ் இல்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளிப்படையாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஓபிஎஸ், இனி என்ன செய்ய போகிறார் என்ற கேள்விக்கு பாஜக-அதிமுக சுயநல கூட்டணி க்கு ஒபிஎஸ் சரியான பதிலடியை கொடுப்பார். ஒபிஎஸ்ஸின் அதிரடியான முடிவுகள் வெளியாகும் பொறுத்திருந்து பாருங்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை தனிக்கட்சி அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை பொறுத்திருந்தே பார்ப்போம்.