வழக்கறிஞர் வஞ்சிநாதன் விவகாரம் குறித்து ஒற்றை வரியில் கூறவேண்டுமானால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனால் நீதித்துறையே தீட்டுபட்டுவிட்டது என்று தான் கூறவேண்டும் என்ற கருத்து பேசுபொருளாகி பரவி வருகிறது.
பொதுவெளியில், தேவதாசி முறையை கலாச்சாரம் பரம்பரியத்தின் ஒரு பகுதி, சூத்திரர்களுக்கு கல்வி உரிமையே இல்லை, என்று கூறிய சனாதன தர்மத்தை ஒரு நீதிபதியாக இருப்பவரே தூக்கிப்பிடிக்கிறார் அதன் வழிநடப்பது பெருமை என்று பொதுவெளியில் பேசுகிறார். தான் சார்ந்த சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
தனி நபராக ஒருவர் தான் சார்ந்த மதம் சாதி குறித்து பேசுவதில் யாருக்கும் எவ்வித எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மாறாக, ஒரு நீதிபதியாக பதவி வகிப்பவர் பேசுவதுதால் சர்ச்சைகள் எழுகிறது.
கற்றறிந்த வழக்கறிஞராக, பின்னர் நீதிபதியாக பதவி வகிக்கும் இவரது வாதங்களையும் தீர்ப்புகளையும் அலசி ஆராய வேண்டிய ஒரு சூழலை அவரே ஏற்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு புகார் எழுந்த நிலையில், அவரே தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
“நானே ஸ்மார்த்தா பிராமணன்” எச்சில் இலை உருளுதல், இறுதியாக “குடுமி வைத்து வைதீகமாக இருக்கும் ஒருவர் தவறே செய்ய மாட்டார் போன்ற வார்த்தைகள் அல்லது தீர்ப்புகள் இந்த சமுதாயத்திற்கு எந்த மாதிரியான முன்னுதாரணத்தை கொடுக்கப்போகிறது.? இவை என்ன மாதிரியான வார்த்தைகள்.? இந்த வார்த்தைகளின் பின்னணியில் உள்ள கட்டமைப்பு எது.? என்பதை விளக்கவேண்டிய இடத்தில் இருப்பவரும் அவர்தான். அவர்தான் விரிவான விளக்கம் தர வேண்டும்.?
இதுபோன்ற பிற்போக்குத்தனமான தீர்ப்புகள் நீதியை மட்டுமல்ல நமது உரிமைகளையும், ஜனநாயக அமைப்பையும் இருளில் தள்ளிவிடும். சாதி,மத ரீதியிலான தீண்டாமையை ஒழிக்க வேண்டிய நீதிமன்றங்களில் இருந்து இதுபோன்ற தீர்ப்புகள் வார்த்தைகள் வெளிப்படுமானால், தொடருமானால் இந்த தேசம் நாசமாகத்தான் போகும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஒரு வழக்கில் பிராமணர் அல்லாதவர்களை எப்படி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்க சொல்லுகின்றீர்கள். நானே “ஸூமார்த்த பிராமணன்’’ நானே கருவறைக்குள் போகமுடியாது’’ நீங்கள் எப்படி மற்றவர்களை அனுமதிக்க சொல்கின்றீர்கள். வழக்கை வாபஸ் வாங்குகின்றீர்களா.? இல்லையா.? என்று கேட்டார். நான் மறுத்த போது பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக வாஞ்சிநாதன் குறிப்பிடுகிறார்.
இதையடுத்து, ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதசார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
வஞ்சிநாதன் 1 மாதத்திற்கு முன்பு அனுப்பிய புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில். அந்த புகார் கடிதத்தை கடிதத்தை கசிய விட்டது யார்.?
வஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகாரின் நகல்களை, வாட்சப் குழுக்களில் பாஜகவை சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட இராஜராஜன் என்ற வழக்கறிஞரும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டதாகவும் வாஞ்சிநாதன் குறிப்பிடுகிறார். இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன.? என்பதை வாசகர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறோம். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
ரகசியமாக வைத்து விசாரிக்கப்படவேண்டிய ஒரு புகார் கடிதம் நீதித்துறையில் இருந்தே அப்பட்டமாக வெளி வந்திருக்கிறது என்றால்.? நீதித்துறையின் மாண்பு மீது மக்களுக்கு எப்படி.? நம்பிக்கை ஏற்படும். புகாரளித்தவருக்கு என்ன.? பாதுகாப்பு இருக்கிறது. இந்த சம்பவம் நீதித்துறைக்கு விடப்பட்ட சவால் என்றுதான் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. யாரால் விடப்பட்ட சவால் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதைப்பற்றி தனியாக குறிப்பிட்ட தேவையில்லை.
நீதிபதி தொடர்பாக, யாராவது புகார் அளிக்க விரும்பினால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நேரடியாக புகார் அனுப்பலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்பினால், உள் விசாரணைக் குழு அமைப்பார். உள் விசாரணைக்குழு விசாரணைக்கு பின் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் நீதித்துறையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நடைமுறை. அந்த அடிப்படையில் சட்ட ரீதியாக வாஞ்சிநாதன் தனது புகாரை அனுப்பியுள்ளார்.
நீதிபதிகளின் நடத்தை, பாகுபாடு பார்ப்பது, அல்லது தவறாக நடந்து கொள்ளுதல், ,தொடர்பாக புகார் அளிக்கும் வழக்கறிஞர் மீது அதே நீதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளது.
இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ‘’எனக்கு நானே நீதிபதி’’ என்ற நோக்கில், தன் மீது எழுப்பபட்ட புகாரை தானே விசாரித்து தனக்குத் தானே தீர்ப்பு வழங்கிக் கொள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிமன்ற அவமதிப்பு என்ற சட்டத்தை கையிலெடுத்து நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் வஞ்சிநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது அவருக்கு முரண்பாடாக தெரியவில்லையா.? என்ற கேள்விகளுக்கும் அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த சம்பவத்தில் மட்டும் இவர் மீது விமர்சனங்கள் எழவில்லை. இதற்கு முன்பும் பல சர்ச்சையான தீர்ப்புகள் வழங்கி விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
கரூரில் மாவட்டத்தில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதியில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளுதல் தொடர்பான வழக்கில் இவரால் வழங்கப்பட தீர்ப்புகள் பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு புகாராகவும் அனுப்பப்பட்டுள்ளது.
மூட பழக்கவழக்கங்களில் பல விதங்கள் உள்ளது. ஆனால் அதே மூடப் பழக்கவழங்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதில் தீண்டாமையை புகுத்துவதென்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதியில் வழக்கமாக நடைபெறும் சடங்கில் ஒரு சாதி பிரிவினர் உணவு உண்ட எச்சில் இலையில் பிற சாதியினர் உருளும் சடங்கு என்பது ஆன்மீகத்துக்கும், மனிதத் தன்மைக்கும், சுகாதாரத்துக்கும் எதிரான சடங்கு. இதை தீண்டாமை என்ற கண்ணோட்டத்தில் தானே பார்க்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தடையை நீக்கி உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
இந்த வழக்கில் பின்னர், உச்சநீதி மன்ற நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற ஒரு அங்கபிரதட்சண சடங்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றமானது தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. மேலும், இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே ஆணை பிறப்பித்துள்ளது.
எனவே, அந்த தடை ஆணையை நாங்கள் நீட்டிக்கிறோம் என உத்தரவிட்டனர், மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், நிலுவையில் உள்ள நெரூர் மடம் வழக்கை கர்நாடக மாநிலம் தொடர்பான வழக்கோடு இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இப்படி பல விமர்சனங்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது எழுந்து வருகிறது. இந்த விமர்சனங்கள் சரியா.? தவறா.? நீதிமன்ற மாண்பா.? என்பதை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒரு நீதிபதியாக யோசித்து பார்க்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.
வாஞ்சிநாதன் புகார் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சட்டவிரோதமாக வஞ்சிநாதனின் புகார்மானு கசிந்த நிலையில், வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. என்று சட்ட வல்லுனர்கள் முன்னாள் நீதியரசர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, வஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து நீதிமன்றங்களின் வாயில் முன்பும் ஜூலை 28 தேதியான இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இந்த விவகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து நீதித்துறையின் மாண்பு குறித்த பொதுஜன நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் மாறாக, மௌனித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் வழிவகுத்து விடும் என்பதில் இங்கு மாற்றுக்கருத்து இல்லை.
அரசு அலுவலகங்களில் சாதி, மத, ரீதியிலான அடையாளங்களை வைக்க கூடாது என்றும் அரசு அலுவலர்கள் சாதி, மத ரீதியிலான அடையாளங்களை அணிவதை தடை செய்யவும் அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் சத்தியபிரமாணம் செய்த பின்னரே தனது இருக்கையில் அமரவேண்டும் என்றும் அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு தங்கள் ஒரு அரசு அதிகாரி பொதுவான நபர் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சிந்தனை மேலோங்கும்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தன் நிலைப்பாட்டில் இப்போது உறுதியாக இருக்கிறாரா.? அல்லது தனது நடவடிக்கையில் மாற்றம் தேவை என்று கருதுகிறாரா.? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு கூறி இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
–அம்பலம்செய்திப்பிரிவு