அதிமுக உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால் தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற முடியும் என கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து செங்கோட்டையன் போர் கொடி தூக்கிய நிலையில், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு சென்ற செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாரமனை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், ஒருங்கிணைந்த அதிமுகவுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என அமித் ஷாவிடம் செங்கோட்டையன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமித் ஷாவிடம் செங்கோட்டையன் கூறியதாகவும் தெரிகிறது
அதேசமயம், பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கறார் காட்டி வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய பின்னர், ஓபிஎஸ் டிடிவி தினகரன் இருவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோர் முதல்வர் வேட்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றினால் கூட்டணியில் இணைவோம் என்று ஒத்த கருத்தோடு, தங்களின் நிலைப்பாட்டை கூறியுள்ளனர்.
இதையடுத்து, பாஜக தேசிய தலைமை இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமியிடமும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னராக, அதிமுக உட்கட்சி விவகாரம், அரசியல் கள நிலவரம், குறித்தும் எடப்பாடி பழனிச்சாமியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் இன்று (11-ம் தேதி) டெல்லி செல்கிறார். அங்கு அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்கிறார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், நயினார் நாகேந்திரனிடம் ஆலோசித்த பிறகு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரையும் டெல்லிக்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி தமிழகத்தில் பலமாக இருப்பதை கருத்தில் கொண்டு, அதிமுகவின் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வந்து, பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து, பலமான கூட்டணியாக தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஓரிரு தினங்களில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Related posts
Click to comment