ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. இந்த கொலையில் சில அரசியல் புள்ளிகளை காவல்துறை விசாரிக்கவில்லை திருவேங்கடம் என்கவுன்டர் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டவில்லை என்று தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் தமிழக காவல்துறை மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது வந்தது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியுள்ள உயர் நீதிமன்றம், எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டருகே காட்டப்படும் புதிய வீட்டின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிறையில் உள்ள தண்டனைக் கைதியும், பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கஞ்சா வியாபாரி அஞ்சலை, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள், பெண்கள் என மொத்தம் 27 பேர் இந்த கொலை வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது போலீசாரை தாக்க முயன்றபோது, போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரபல சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் கடந்த ஓராண்டாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீஸார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த தனது சகோதரரின் படுகொலை வழக்கை செம்பியம் போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை.
இந்த கொலையில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பிடிக்க தமிழக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்து வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த வழக்கில் உடனடியாக 27 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்றத்தில் விசாரணை சரியான கோணத்தில் தான் நடந்து வருகிறது என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவுள்ள ரவுடி நாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்த தமிழக காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவரிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
இந்த வழக்கில் கைதான திருவேங்கடம் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீஸார் தெளிவுபடுத்தவில்லை. பல உண்மைகளை மறைத்து போலீஸார் அவசரகதியில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டிருந்தார். இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி பி.வேல்முருகன் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியும், சிபிஐ அதிகாரிகள் அரசியல் குறுக்கீடோ, ஊடக குறுக்கீடோ இல்லாமல் சுதந்திரமாக விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.