தமிழக காவல்துறையில் என்னதான் நடக்கிறது.?
லாக்கப் டெத் விவகாரங்கள், மறுபுறம் காவல்துறை அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊடகத்தின் முன் பேட்டியளிப்பது என்று தமிழக காவல்துறையில் தினம் ஒரு போராட்டமாகவே இருக்கிறது. தமிழக காவல்துறையில் என்னதான் நடக்கிறது.? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசன் மாவட்ட எஸ்.பி மீதும் கோ.ஸ்டாலின் மீதும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மீதும் ஊடகங்களில் பேட்டியளித்து, சஸ்பெண்ட் ஆன நிலையில், மற்றொரு டி.எஸ்.பி விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலருக்கு கடிதம் எழுதி பரபரப்பை பற்றவைத்திருக்கிறார்.
1997 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, தற்போது திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீநிவாஸ்.
இவர் தனது குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தன்னால் தொடர்ச்சியாக பணி செய்ய முடியவில்லை தனக்கு விருப்ப ஓய்வு வேண்டுமென தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனிப்பட்ட பிரச்னையா.? அல்லது உயர் அதிகாரிகாளால் மன உளைச்சலா.? அல்லது பணிச்சுமையா.? என்ற விவரங்கள் வெளிப்படையாக தற்போது தெரியவில்லை. மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் பரத் ஸ்ரீநிவாஸ் அவர்களுடைய விருப்ப ஓய்வு கடித விவகாரம் திருச்சி மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.