‘’மாமூல் வாங்குறதுக்கு.. பிச்சை எடுத்து சாப்பிடலாம்’’ மாமூல் போலீசாருக்கு டோஸ் விட்ட கடலூர் எஸ்பி.ஜெயக்குமார்



எங்கு பார்க்கினும் அதிகாரிகளின் ஆதரவோடு, திரைமறைவில் சட்டவிரோத தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நேர்மையாக இல்லை என்றால் இந்த சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். சிக்கும்போது சின்னாபின்னமாகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு பயமில்லை என்கிற போது, அரசு இந்த பூனைகளுக்கு மணி கட்டும் விதமாக சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்து ஏதாவது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது எழுந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கள்ள லாட்டரி விற்பனையாளர்களிடம் மாமூல் பெற்ற அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல கள்ள லாட்டரி வியாபாரி நசீர். இவர் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரிகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் அவர்களுக்கு புகார் சென்றுள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் உயர் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நசீரை தட்டி தூக்கியுள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரித்ததில், நகர காவல்நிலைய எஸ்.பி ஏட்டு கார்த்தி, காவலர்கள் கோவிந்தராஜ், நடராஜ், உதவி ஆய்வாளர் பரணி, ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி காவல் கண்காணிப்பாளர் லாமேக் என தான் மாமூல் கொடுத்த அதிகாரிகளின் பட்டியலை கூறியுள்ளனர். இவர்கள் அனைவரும் மாமூல் பெற்றுக்கொண்டு, நசீருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து மாவட்டம் முழுவதும் கள்ள லாட்டரி விற்பனைக்கு ஆதரவளித்தது அம்பலமானது.
இந்த விபரங்களை ஸ்பெஷல் டீம் உதவி காவல் கண்காணிப்பாளர் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இந்த புகார்களின் தற்போதைய, நடவடிக்கையாக மாமூல் அதிகாரிகள் அனைவரும் வேலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேல் நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், கடலூர்,பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு உட்கோட்ட காவல் அதிகாரிகளையும் மைக்கில் அழைத்த மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் சிதம்பரம் பகுதியில் காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமூல் வசூலித்தது தெரியவருகிறது. ஒருசில அதிகாரிகள் மட்டுமே விதிவிலக்காக நேர்மையாக பணியாற்றி வருகின்றனர். இனியும் லாட்டரி வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்தால், கண்டிப்பாக வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்கள். லாட்டரி, கஞ்சா விற்பனைக்காக ‘’மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்’’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் மாமூல் அதிகாரிகள் நடுக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.


banner

Related posts

“சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த ராகுலின் செயல் வெட்கக்கேடானது – கடுமையாக சாடிய ஷேசாத் பூனவல்லா

Ambalam News

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்..

Admin

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்சநீதி மன்றம் அதிரடி

Ambalam News

Leave a Comment