அதிமுக – திமுக ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்.? தவெக தாக்குப்பிடிக்குமா.? கள நிலவரம் என்ன.?


தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அறிக்கைப்போர் உச்சமடைந்திருக்கிறது, திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் என்றெல்லாம் யூகங்களும் வதந்திக்களும் றெக்கை கட்டி பறந்தநிலையில், காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்தது திமுக.

அடுத்ததாக, அதிமுக பாஜக தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தைக்கு டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி அலைந்து வருகிறார். திமுகவின் கௌரவம் காற்றில் பறந்து வருகிறது. இது அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுகவா.? என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு கிண்டலடிக்கும் தொனியில் காட்டமாக விமர்சிக்கும் நிலையில் இருக்கிறது அதிமுக. இந்நிலையில், பாமக அன்புமணி, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் இருவரையும் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க டெல்லிக்கு அழைத்திருக்கிறது பாஜக. ஒப்புக்கு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்க தமிழகம் வரவிருக்கிறார் மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல்.

சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் தவெக விஜய்யை கரூர் துயர சம்பவ வழக்கு வாயிலாக பாஜக வளைத்துவிட்டது என்.டி.ஏ கூட்டணியில் தவெக ஐக்கியமாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆரம்பம் முதலே இந்த விஷயத்தில் மௌனம் காத்துவந்த விஜய் திடீரென இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திட்டவட்டமாக அறிவித்தார். என்.டி.எ கூட்டணி குறித்த கூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமியும் தவேகவுடன் கூட்டணி இல்லை என்று தெரித்தார்.

ஆக, ஏறக்குறைய அனைத்து கட்சிகளின் கூட்டணிகள் குறித்த செயல்பாடுகள் முடிவடைந்த நிலையில், கூட்டணி குறித்த சர்ச்சைகள் ஓரளவு முற்றுப்பெரும் தருவாயை எட்டிவிட்டதால், வருகின்ற சட்டமன்ற தேர்தல் களம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற அடுத்த அலசலை தொடங்கி விட்டனர் அரசியல் பார்வையாளர்கள்..

வரும் தேர்தலில் அதிமுக திமுக எந்த கூட்டணி வெற்றி வாகை சூடப்போகிறது. எந்த கட்சி எந்தெந்த காரணிகளால் பலமிழந்துள்ளது.? பலமடைந்துள்ளது.? தவெக தனித்து நிற்பது யாருக்கு லாபம்.? தவெக வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவார்களா.? விஜய் தனது தொகுதியில் வெற்றி பெறுவாரா.? திமுக கூட்டணிக்கு எந்த அளவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

அதிமுக..

அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். அதிமுகவின் பலம் என்ன.? பலவீனம் என்ன.? தேர்தல் வியூகங்கள் என அனைத்தையும் நன்கறிந்தவர். அந்த வகையில் அதிமுகவுக்கான சாதக பாதாகங்கள் அதிமுக வேட்பாளர்களின் பின்னணி என அனைத்தையும் மொத்தமாக அறிந்தவர் என்பதால் அந்த தரவுகளுக்கு ஏற்ப திமுகவும் திமுக வேட்பாளர்களும் காய் நகர்த்தக்கூடும். செந்தில் பாலஜியை திமுக பயன்படுத்திக்கொண்டதை போல ஓபிஎஸ்ஸும் திமுகவின் தளபதிகளில் ஒருவராக களத்தில் சுழலக்கூடும் அது அதிமுகவிற்கு இழப்பை ஏற்படுத்தும். கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலஜியை வைத்து அதிமுகவிற்கு செக் வைக்கும் திமுக, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் மூலமாக அதிமுகவை பலவீனப்படுத்தும். போதாக்குறைக்கு புது கட்சியை ஆரம்பித்த வி.கே.சசிகலா தென் மாவட்டங்கள் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களிலும் அதிமுக வாக்குகளை பிரித்து அதிமுகவை பலவீனப்படுத்துவார். பாமக ராமதாஸ் பங்களிப்பும் அதிமுகவை பலவீனப்படுத்தும். தவெக பக்கம் தாவிய செங்கோட்டையன் தனது செல்வாக்கால் சில தொகுதிகளில் அதிமுகவுக்கு இழப்பை ஏற்படுத்துவது உறுதியாகிவிட்டது. பொதுவாக, பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிமிடமே அதிமுகவின் வெற்றி கேள்விக்குறியாக்கிவிட்டது என்ற பேச்சை மக்கள் மத்தியில் கேட்க முடிகிறது. பாஜக அதிமுக கூட்டணியை பெரும்பான்மையான நடுநிலை வாக்காளர்கள் ரசிக்கவில்லை. தேர்தல் களம் அதிமுகவுக்கு சோதனைக்களமாகவே இருக்கும்.

தவெக

கட்சி தொடங்கியதிலிருந்தே சர்ச்சை நாயகனாகி விட்டார் விஜய். மதுரை மாநாடு குளறுபடிகள் சர்ச்சை பேச்சுகள், கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம். அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக விஜய் மௌனம் காத்தது. அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், விஜய் மனைவி அவரது நடத்தை குறித்து விவாகரத்து மனுவில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள், கட்சிக்குள் புஸ்ஸி ஆனந்த்தின் நடவடிக்கைகள், நிர்வாகிகளை நியமிப்பதில் தொடரும் சர்ச்சைகள், வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் புறக்கணிக்கும் விஜய்யின் போக்கு போன்ற பல பலவீனங்கள் தவெகவை சரிவை நோக்கி தள்ளி வருகிறது. தவெக வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கவே போராட வேண்டியிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. இவ்வளவு பலவீனங்களை தோலில் சுமக்கும் தவெகவுக்கு பலம் மைனஸ் தான். தேர்தலுக்கு பின் அடுத்த தேர்தல் வரை தவெக அரசியல் களத்தில் இதே உத்வேகத்துடனும் கொள்கையடனும் தாக்குப்பிடிப்பதே சந்தேகம் தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

திமுகவை வீழ்த்த பாஜக – அதிமுகவின் அரசியல் கணக்கு

பாஜக அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியை பலப்படுத்துவதை விட திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு களமாடி வருகிறது. திமுகவை பலவீனப்படுத்த எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாத நிலையில், சில சமூக ஊடகங்கள் மூலமாக திமுகவை விமர்சிப்பது, ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கக்கூடிய குற்றங்களை போல தமிழகத்தில் நடந்த சில கசப்பான குற்றச்சம்பவங்களை கையில் எடுத்து, திமுகவால் தான் இப்படி நடந்தது என்று ஒரு பிம்பத்தை கட்டமைத்து மக்கள் மத்தியில் திமுக மீது அவநம்பிக்கையை கொண்டுவர முயற்சிப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக வாரிசு அரசியல் என்று கூக்குரலிடுவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர். ஆனால் மக்கள் மத்தியில் இவர்களது முன்னெடுப்புகள் தவிடுபொடியான நிலையில், கருத்து கணிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து தங்களுக்கு ஆதரவான அமைப்புகள் வாயிலாக திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் இல்லை என்பதாக கட்டமைக்க தொடங்கி விட்டனர்.

கருத்து கணிப்பு

அதிமுக கூட்டணி 140 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் திமுக 90 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக அமரும் என்று தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். சமூக ஊடகங்களில் அதிமுக வெற்றிபெறும் என்றே கருத்துகணிப்பை வெளியீட்டு வருகின்றனர். விஜய்யை ஆதரிப்பவர்களில் இளைஞர்கள் மற்றும் முதல்முறையாக வாக்களிப்பவர்கள் அதிகம் உள்ளனர். போதாக்குறைக்கு திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்களின் வாக்குகள் விஜய்க்கு செல்லும் ஆக திமுகவின் வாக்குகள் சிதறும் என்ற கூற்றையும் பரப்பி வருகின்றனர். ஆனால், இந்த கூற்றுக்கள் தேர்தலில் எடுபடாது. மக்களிடம் மானமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதாகவே இருக்கிறது கள நிலவரம்.

முதல்வர் மு. க ஸ்டாலின் கூறுவது போல திமுக வெற்றி வாகை சூடுமா.?

ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமானால் பார்டர் மார்க்ல பாஸ் கதைதான். வெற்றி பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும் களத்தில் உண்மையாக நிற்க வேண்டியவர்கள், களத்தில் நிற்பவர்களை சரியான வழியில் நடத்தவேண்டியவர்கள், களத்தில் யார் நிற்க வேண்டும் என்று அடையாளப்படுத்தவேண்டியவர்கள் தலைமைக்கு சாமரம் வீசி குளிர்வித்து சுயலாபம் அடைவதாகவே பலர் புலம்பி வருகின்றனர். உண்மையான கள நிலவரத்தை தலைமைக்கு கொண்டு செல்லாமல், ஆதாயத்திற்காக களநிலவரம் சாதகமாக இருப்பதாக கூறிவருகின்றனர். வேட்பாளர்கள் தேர்வு வரை மறைமுகமாக சிலர் மூக்கை நுழைப்பதாக கூறப்படுகிறது. வீக்ககாக உள்ள தொகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை உயர்த்த பாடுபட வேண்டியவர்கள் சுய லாபத்திற்காக பாடுபட்டு கட்சியை பலவீனப்படுத்துகிறார்கள் என்கின்றனர்.

சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, அப்போது பெற்ற வாக்குகளின் சதவிகிதத்தையும், தற்போது உள்ள கள நிலவரத்தையும் கணிக்க தவறினால், வாய்ப்புகள் கைநழுவ வாய்ப்பிருக்கிறது. வேட்பாளர்களின் தேர்வும், தொகுதிக்கு தேவையான தனிப்பட்ட திட்டங்களும் வாக்குறுதிகளிலும் கவனம் செலுத்துவது நல்லது.

தற்போதைய நிலவரம் திமுகவுக்கு சற்று சாதகமாக இருக்கிறது. ஆனால் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திமுக.

– அம்பலம் செய்திக்குழு


banner

Related posts

உல்லாசத்துக்கு வா.! பணம் கொடு.. புதுமண பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேர் கைது.. முக்கியபுள்ளிகளின் வாரிசுகளுக்கு தொடர்பா.?

Ambalam News

நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குமா.?

Ambalam News

மகளின் காதலனை ஆணவக்கொலை செய்த தாய்.? மயிலாடுதுறையில் பயங்கரம்..

Ambalam News

Leave a Comment