திமுகவுடன் கூட்டணி… தேமுதிக, ஓபிஎஸ், விசிக, மதிமுக தொண்டர்களின் கருத்து என்ன.?  – கள ஆய்வு…



தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பிரச்சார தீயை யார்.? பற்றவைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் நிலவி வந்தத நிலையில், ’மக்களைக் காப்போம்’’ ‘’தமிழகத்தை மீட்போம்’’ என்ற கோஷத்துடன் சட்டமன்ற தேர்தல் களத்தில் அதிரடியாக என்ட்ரி கொடுத்து பரபரப்பு நெருப்பை பற்றவைத்தார் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
கடந்த 7.7.2025 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து ‘’மக்களைக் காப்போம்’’ ‘’தமிழகத்தை மீட்போம்’’ என்ற கோஷத்துடன் ஸ்டாலின் பெயிலியர் மாடல் ஆட்சியை அகற்றுவேன் என்ற அறிவிப்போடு தனது முதல் தொடர் பிரச்சார பயணத்தை ஆரம்பித்தார். மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதே பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்து களமிறங்கி இருக்கிறார்.


பாஜகவுடனான அதிமுக கூட்டணி குறித்து கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்தது. கூட்டணி குறித்து எழுந்த கடும் விமர்சனங்களை தொடர்ந்து தனது பிரசாரத்தில் அவர் பாஜகவை முன்னிறுத்தி பேசுவதையும், பாஜக பெயரை உச்சரிப்பதையும் கூட பெருமளவில் தவிர்த்து திமுக வசைபாடலை முன்னிறுத்தி வருகிறார்.
மற்ற கட்சிகளான ஓபிஎஸ் அணி, தேமுதிக, விசிக, மதிமுக, போன்ற காட்சிகள் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலை அறிய நாம் களமிறங்கிய போது, கூட்டணி குறித்த அவர்களின் பார்வை தெளிவாக இருப்பதை உணர முடிந்தது.


ஓபிஎஸ் அணி

அதிமுகவால் வெளியேற்றப்பட்டு, ‘’அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’’ என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வந்த ஓபிஎஸ், அதிமுகவில் மீண்டும் இணைய காய்நகர்த்தி வந்தார். எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், அதிமுகவுடனான இணைப்புக்கு பாஜக உதவும் என்ற மனநிலையில் இருந்தவரை இறுதியில் பாஜகவும் கழட்டிவிட்டது. யாருடன் கூட்டணி யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் ஓபிஎஸ். இந்நிலையில் தான் அவர் ஸ்டாலினை சந்திதிருக்கிறார். திமுக குறித்த ஓபிஎஸ் முடிவுக்கு அவரது ஆதரவாளர்கள் பச்சை கோடி காட்டியுள்ளதாக தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகத்துக்கு அவர் வருந்தியாக வேண்டும் என்பதே ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.


இந்நிலையில், ஓபிஎஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தி தொடர்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, அதை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டணி குறித்து தக்க நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணி குறித்து தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து, களநிலவரத்தை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும், திமுக ஆட்சியில் மக்களின் பிரச்னைகள், தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடு பற்றி மக்களிடம் எடுத்துக் கூறவும், அதிமுக அழிவுப்பாதையில் செல்வதை மக்களிடம் எடுத்துக்காட்டவும் தனது தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேசமயம் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று தனது வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுளார்.
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அரசியலில் நண்பருமில்லை எதிரியும் இல்லை என்று ஒபிஎஸ் சமீபத்தில் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டுவதோடு, பாஜக அதிமுக மக்கள் விரோத கூட்டணியை முறியடிக்க திமுகவுடன் கூட்டணி சேர்வதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.


தேமுதிக – பிரேமலதா

அதேபோல, தேமுதிக தலைவர் பிரேமலதா தனது பாதையை மாறிக்கொள்ள நினைக்கிறார் என்று தகவல்கள் கசிந்து வந்தது. கடந்த தேர்தல்களில் தேமுதிக பாஜக அதிமுகவுடன் இணைந்திருந்தது. சென்றமுறை அதிமுக மாநிலங்கவையில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்காத நிலையில் அதிமுக மீது பிரேமலதாவும் தேமுதிகவினரும் அதிருப்தியில் இருந்தனர்.

மாநில அரசியலில் தேமுதிக முக்கியத்துவம் பெற்றுவிடக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாக பிரேமலதாவிடம் எடுத்துச் சொல்லப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இதனால் அதிமுக மீது பிரேமலதா அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர் தேமுதிகவினர். இதன் காரணமாகவே, இதுவரை தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் பிரேமலதா வெளியிடவில்லை என்கின்றனர் தேமுதிகவினர். பாஜகவின் மக்கள் விரோதப்போக்கால் அதிமுக – பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளது. மக்கள் நலன் சார்ந்து திமுகவுடன் தேமுதிக பயணிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.


விசிக – திருமாவளவன்


விசிக வை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் மாறாமல் பயணிக்கின்றனர். இருப்பினும் வருகின்ற சட்டமன்றதேர்தலில் திமுக தங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரும். திமுக பாமக வை கூட்டணியில் இணைத்துக் கொண்டால் என்ன முடிவெடுப்பது என்ற ஆலோசனையில் திருமா இருப்பதாகவும் இருப்பினும் திமுக மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.


வைகோ – மதிமுக


வைகோவை பொறுத்தவரை திமுக மட்டுமே சாய்ஸ் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார். மதிமுக தொண்டர்கள் அவர் முடிவை எப்போதும் போல ஆதரிக்கின்றனர்.

தவெக நடிகர் விஜய்யுடன் கூட்டணியா.?

இந்தநிலையில்தான் புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஓபிஎஸ் ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, தேமுதிகவும் கூட விஜயுடன் கூட்டணி வைக்கும் என்று ஹேஸ்யங்கள் கூறப்பட்டது. அதிமுக திமுகவை எதிர்த்து புதிய கூட்டணி உதயமாகும் என்று அக்கட்சிகளின் தொண்டர்கள் சிலரே கூட பேசிவந்தனர்.


ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், விசிகவினர் மதிமுகவினர் தேமுதிக தொண்டர்களை பொறுத்தவரையில் அவர்களின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது.
2016 தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிக, மதிமுக, ஜி‌.கே. வாசனின் தமாகா, திருமாவளவனின் விசிக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பலமான கூட்டணியாக தேர்தலை சந்தித்தோம். அப்போது நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதை நினைவு கூறுகின்றனர். நடிகர் விஜய்யுடன் கூட்டணி என்பது சிறுபிள்ளையை நம்பி வெள்ளாமை வைத்த கதையாகத்தான் இருக்கும் விஜயகாந்த் அளவுக்கு இவருக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை. தவேக வுடன் கூட்டணி வைப்பது சந்தர்ப்பவாத சுயநல கூட்டணியாக விமர்சிக்கப்பட்டுவிடும்.
அதேபோல, அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்கும் அவர்கள் பாஜக எதிர்ப்பலை வீசும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கின்றனர். பாஜக தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதை சுட்டிக்காட்டும் அவர்கள் அதிமுக தலைமைக்கு பாஜக கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக அமைத்த கூட்டணி. இது தலைவர்களின் இந்த கூட்டணி. அதிமுக தொண்டர்கள் ஆதரவு அற்ற கூட்டணி என்கின்றனர் தேமுதிக தொண்டர்கள்.

அதே நேரத்தில் மேற்கண்ட கட்சி தொண்டர்கள், கூட்டணியில் இருந்த மக்கள் நீதி மையத்துக்கு திமுக மாநிலங்களவையில் சீட் கொடுத்து கௌரவித்ததை குறிப்பிடுகின்றனர். திமுகவுடன் கூட்டணி வைப்பது காலத்தின் கட்டாயம் அல்ல. பாஜகவை தமிழகத்தில் இருந்து அகற்றுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்கின்றனர்.
திமுக முன்னெடுத்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வமாக இணைவது பாஜக எதிர்ப்பலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திமுகவுடன் கூட்டணி என்பதுதான் சரியான அரசியல் போக்கு என்கின்றனர்.
பண்பாடு, பொருளாதாரம், இந்தித் திணிப்பு, நீட், கீழடி ஆய்வுக்கு அங்கீகாரம் மறுப்பது, கல்விக்கான நிதி மறுப்பு, கூட்டாட்சி முறையைச் சிதைப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவகாரம், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நம் உரிமையை நசுக்குவது, பிரதிநிதித்துவத்தை குறைப்பது, போன்ற ஒன்றிய அரசின் போக்குகளுக்கு கடிவாளம் போடும் வகையில். மண், மொழி, மானம் ஆகியவற்றைப் பாதுகாக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை திமுக முன்னெடுத்தது.


மக்கள் இயக்கத்தில் இணய தொடங்கிய அதே வேளையில், பல்வேறு கட்சியினரும் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பாஜக எதிர்ப்பலை, அதிமுகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகளை திமுக தலைமையில் ஓரணியில் இணைக்கும் என்பதே தற்போதைய கள நிலவரம்.

-அம்பலம் புலனாய்வு செய்தி


banner

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்ட விரிவாக்க விழா.. சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் பங்கேற்கிறார்..

Ambalam News

உத்தரகாசியில் மேகவெடிப்பு, திடீர் வெள்ளம், மண்சரிவு, ராணுவ வீரர்கள் 11 பேர் மாயம்

Ambalam News

டி.ஆர்.பி. ராஜா முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துள்ளார் – தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

Ambalam News

Leave a Comment