தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. இதில் பொது, வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் ஆகஸ்ட் 5, 6 ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல ஆகஸ்ட் 7ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடந்தது.
இதையடுத்து ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல் நாளில் வருவாய் பேரிடர், மருத்துவத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அடுத்த நாள் பொதுப் பணித் துறை, பிறகு நீர்வளத் துறை, மானியக் கோரிக்கைகள் நடைபெற்றது.
நேற்றைய தினம் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. விவாதத்தின் போது அரசுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் ரேஷன் அரிசி மற்றும் இதர பொருட்கள் கடத்தல் குறித்தோ, நியாயவிலைக்கடைகளில் நடைபெட்ட முறைகேடுகள், ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள், அரவைமில்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் கண்டறியப்பட்ட முறைகேடுகள் குறித்து அமைச்சர் வாய் திறக்காமல் மௌனமாக கடந்து விட்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சட்டத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை அளிக்கிறார்கள். கடந்த ஆட்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக சேகர் பாபுவும் சட்டத் துறை அமைச்சராக ரகுபதியும் இருந்தனர்.
ஏற்கெனவே ஆடிக் கிருத்திகைக்கு திருத்தணிக்கு வந்த சேகர்பாபுவின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்தின் முக்கிய கோயில்களில் விஐபிக்கள் வருவதென்றால் ஒரு நாள் முன்னரே கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்து அறநிலையத் துறையில் என்னென்ன நடந்தது என்பது குறித்து சேகர்பாபுவுடன் ரமேஷ் மோதுவார் என தெரிகிறது.
அமைச்சர் ரமேஷ் அறநிலையத்துறை வாயிலாக மக்கள் நலன் சார்ந்து தவெக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஊழல் சம்பந்தமான விபரங்களை புள்ளி விபரத்துடன் கூறுவாரா.? என்று பார்ப்போம்.

