செங்கோட்டையன் தலைமையில் ”போட்டி அதிமுக”.!? அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.!!?



சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி ..அரசியல் அரட்டை..

நீங்க சொன்னது போலவே.. செங்கோட்டையன், ஒருங்கிணைந்த அதிமுக, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கவேண்டும்.! என்று கோரிக்கை வைத்து பிரஸ்மீட்டை முடித்திருக்கிறார். எடுத்த காரியத்த முடிச்சுருவாரா.? செங்கோட்டையன் கருத்தை எடப்பாடியார்.? ஏற்றுக்கொள்வாரா.? என்று கேட்டபடியே.. வந்து அமர்ந்தார் சிலைடு சிங்காரம்..
கடுப்பான கந்தசாமி, இதெல்லாம் நடக்குற விஷயமா.? சிலைடு சிங்காரம்.. ஆட்சியா.? கட்சியா.? என்ற சூழல் வந்தால், ஆட்சியைவிட கட்சிதான் முக்கியம் என்பதுதான் எடப்பாடியரின் மனநிலை. இதை மனதில் வைத்துக்கொண்டுதான் தேர்தல் நெருங்கும் வரை பொறுமையாக காத்திருந்திருக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையன் பேச்சை கவனித்தீரா.? இதற்கு முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் அவர்களாலேயே மீண்டும் சேர்க்கப்பட்டார்கள். அதுதான் சிறந்த முடிவு என்கிறார். ஆக எம்ஜிஆர் ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமி ராஜதந்திரி இல்லை என்று மறைமுகமாக கூறுகிறார்.
பிரிந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் நோக்கோடு, ஒன்றிணைப்பு குறித்து, 6 முக்கிய முன்னாள் அமைச்சர்களுடன் சென்று வலியுறுத்தியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறுகிறார். இதையேதான் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவும் கூறினார். டிடிவி. தினகரனை கட்சியில் சேருங்கள், பிரிந்து சென்றவர்களை கட்சியில் சேருங்கள், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று எடப்பாடியாரிடம் கூறியிருக்கிறார். அன்று முதல் அன்வர்ராஜாவுக்கான நெருக்கடிகளை எடப்பாடியார் கொடுக்கத் தொடங்கி விட்டார். கடைசியில் அவர் திமுகவுக்கு பறந்தார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இப்போது தேர்தல் சமயத்தில் எடப்பாட்டியாருக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
யார் சொன்னாலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரனை எடப்பாடியார் கட்சியில் சேர்க்கமாட்டார். 10 நாள் அல்ல, 100 நாள் டைம் கொடுத்தாலும் அது நடக்காது. அது தெரிந்தே தான் செங்கோட்டையன் இந்த டார்கெட்டை முன் வைத்திருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரை எல்லாம் எடப்பாடியார்தான் என்ற தாரக மந்திரத்தை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு தான் இடம் என்பது செங்கோட்டையனுக்கு தெரியாததல்ல.
ஒருங்கிணைந்த அதிமுகவை நாங்கள் உருவாக்க முனைந்தோம். எடப்பாடியார் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தொண்டர்களின் விருப்பப்படி, பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று கூற, ஒரு வாய்ப்பை இத பத்திரிகையாளர் சந்திப்பு வாயிலாக உருவாக்கி இருக்கிறார் செங்கோட்டையன்.
விரைவில் அதிமுக அணிக்குள் சலசலப்பு ஏற்படும். முக்கிய நிர்வாகிகளுடன் போட்டி அதிமுக உருவாகும். அதிமுகவுக்குள் எஞ்சியிருக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆட்கள், இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். செங்கோட்டையன் அன்வர்ராஜா, மைத்ரேயன், போன்ற இன்னும் எத்தனை பேர் எடப்பாட்டியாருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இனி தெரியுவரும். அதிமுக ரத்தத்தின் ரத்தங்களை பொறுத்தவரை உடைந்த அதிமுக ஒன்று சேரவேண்டும் என்றுதான் துடிக்கிறார்கள். அரசியல் களத்தில் அதிமுக பலமிழந்து நிற்பதை அவர்கள் விரும்பவில்லை.
இந்நிலையில், சசிகலா செங்கோட்டையன் கருத்தை வரவேற்று, அவருக்கு அதிமுக ரத்தம் ஓடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ வைதியநாதன் அதிமுக தொண்டர்கள் அவர் பின்னால் இருப்பதாக கூறியுள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று பாஜக தலைவர்கள் அறிவித்திருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் செங்கோட்டையன் முடிவை வரவேற்றிருக்கிறாரே.?
எப்படியோ.? எரிகின்ற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் தானே.? அவர்கள் கூட்டணிக்கு பலம் சேர்ந்தால் நல்லது ஆகையால் வரவேற்பார்கள். எடப்பாடியாருக்கு நெருக்கடி அதிகமானால், அது பாஜகவுக்கு ஆதாயம். நாங்கள் உங்கள் கட்சி பிரச்னையில் தலையிடவில்லை. உங்க உட்கட்சி பூசலுக்கு நாங்க பொறுப்பா.? ‘’தேர்தல் வெற்றி, கூட்டணி இத மனசுல வச்சு நல்ல முடிவா எடுங்க’’, என்று இனி டெல்லியில் இருந்து எடப்படியாருக்கு நெருக்கடி வரும். அதாவது மறைமுகமாக அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக முயலும். ஆனாலும் எடப்பாடியாரின் தயவு முக்கியம் என்பதால், கட்டாயப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்காது. ஆக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க எடப்பாடியார் முன்வராத நிலையில், செங்கோட்டையன் தலைமையில், பிரிந்தவர்களை புதிய அணியாக ஒருங்கிணைத்து ‘’போட்டி அதிமுக’’ அமைத்து, தனித்தோ.? அல்லது புதிய கூட்டணி அமைத்தோ.? களத்தில் நிற்க மட்டுமே வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


banner

Related posts

திமுக சமூக நீதியின் துரோகி – பா.ம.க பொதுக் குழுவில் அன்புமணி பேச்சு

Ambalam News

இனிய சுதந்திர தின வாழ்த்துகள் – மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம்

Ambalam News

முருகன் மாநாடு: எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி.! அதிமுகவில் நடப்பது என்ன?

Admin

Leave a Comment