அதிமுகவில் நடந்து வரும் உட்கட்சி மோதலை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கடந்த 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் ‘’எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களோடு இணைந்து பணியாற்றுவோம், என்று பல்வேறு மேடைகளில் கடிதங்களில் சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொறுப்பும் தேவையில்லை என அவர்கள் சொல்லும்போது, நாம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். கடந்த காலங்களில் இப்படிதான் நடந்திருக்கிறது.
10 நாட்கள் காலக்கெடுவில் ஒருகிணைப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுப்பேன். அதுவரை எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் அதுவரை பங்கேற்க மாட்டேன்” என்று பேசி இருந்தார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல்லில் முகாமிட்டிருந்தார். அங்கே ஒரு தனியார் ஹோட்டலில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அவர் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையனை, அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதிமுகவில் அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “இந்த அறிவிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் நான் பேசியிருந்தேன். அதற்கு இன்று கழகத்தின் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்துள்ளார்கள்.
ஜனநாயக முறைப்படி கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். விளக்கம் கேட்காமலே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாங்கள் ஜனநாயகத்தை காக்கிறோம், சுயமரியாதையோடு யாரும் எங்கள் கட்சியில் கருத்து தெரிவிக்கலாம் எனப் பல மேடைகளில் பேசியிருக்கிறார். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்.
நான் அறிவித்ததை நோக்கி என்னுடைய பணி தொடரும். நான் பேசியது கட்சியின் நலனுக்கானது, என் நலனுக்காக அல்ல” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் செங்கோட்டையன் வரும் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது. 9 ஆம் முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க இருக்கிறார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து, தனி அணியாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அறிவிப்பு வெளியிட போவதாக பேசப்படுகிறது.