பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மட்டுமே போதும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நினைக்கிறார். அவருக்கு கூட்டணியை எப்படி கையாள வேண்டும் என தெரியவில்லை என்று பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்துள்ளார
அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை ஒன்றிணைக்குமாறு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போர்க் கொடி உயர்த்தியுள்ளார். மேலும் இந்த பணிகளை தொடங்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து தனது நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி, கே.ஏ.செங்கோட்டையனின் பதவியை பறித்தார். இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காகத்தான் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தோம். அண்ணாமலையோடு அந்த கூட்டணியில் இணைந்து பயணித்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு.
ஒரே ஒரு நபர் மற்றும் அவரிடம் உள்ள சிலரை எதிர்த்தே இந்த இயக்கத்தை நாங்கள் ஆரம்பித்தோம். அவர்கள் திருந்துவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதால் வெளியேறிவிட்டோம்.
இது அவசரத்தில் எடுத்த முடிவு இல்லை. நிதானமாக தொண்டர்களுடன் கலந்தாலோசித்து எடுத்த முடிவு. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தவரை எல்லாரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் நயினார் நாகேந்திரன், பெரிய கட்சி, சிறிய கட்சி என பாகுபாடு காட்டுகிறார்.
அண்ணாமலை இருந்த வரை, ஏ.சி.சண்முகம், ஓபிஎஸ், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர் உள்ளிட்டோரை மரியாதையாகவே நடத்தினார். நான் கூட்டணியை விட்டு விலகுவதாக சொன்ன போது கூட, அவர் “அண்ணே கொஞ்சம் யோசிங்க, அவசரப்பட வேண்டாம்” என்றார்.
ஆனால் நாங்கள் இந்த கூட்டணியில் இருப்பது நயினாருக்கு பிடிக்கவில்லை என்கிற போது எப்படி நீடிப்பது, அதனால்தான் வெளியேறிவிட்டோம்.
எங்களுக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்குச் சமமான முடிவு. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கி பிடித்ததே கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற காரணம். பாஜகவுக்கு எது நல்லது என்று நயினார் யோசிக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பேன் என நான் ஒரு போதும் கூறவில்லை. என்னுடன் இணைந்து பயணிக்கும் கட்சியானருக்கு நான் என்ன பதி சொல்வது. கூட்டணியில் இருந்து வெளியேறியதன் பின்னணியில் அண்ணாமலை இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கேயும் சொல்லவில்லை. அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளர் என்றுதான் அவர் தெரிவித்தார். இன்றைக்கு தமிழ்நாடு மக்களின் மனநிலை என்ன என்பது அவருக்கும் தெரியவில்லை அவர்களை சார்ந்தவர்களுக்கும் தெரியவில்லை, புரியாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருகிக்கிறார்.