மக்களின் குரல்வலையை நேரிக்கும் அளவிற்கு விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அவர்களை பொருளாதார சேமிப்பு அற்றவர்களாக்கி நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது மத்திய அரசின் பொருளாதார கொள்கை. இவற்றிற்கெல்லாம் காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வுதான் காரணம் என்பது பொருளாதார வல்லுனர்களின் வாதமாக இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒருபக்கம் வாட்டி வதைக்கும் சூழலில், சுங்கச்சாவடிகளின் கட்டண வசூல் கொள்ளை ஒருபுறம் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்நிலையில் தான் மத்திய அரசு மீண்டும் மீண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை உயர்த்தி அறிவித்துக் கொண்டே இருக்கிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக அத்யாவசிய பொருட்களின் விலைவாசி 10 முதல் 15 சதவிகிதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுருக்கிறது. உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு அடித்தட்டு அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை மத்திய பாஜக அரசு கருத்தில் கொள்ளாமல், இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழகத்தில் செப்டம்பர் 1 இன்று முதல் 38 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்ற சுங்கச்சாவடிகளும் செயல்படுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ம் தேதியான இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது.
இந்த உயர்வு சென்னை பெங்களூரு, சென்னை-திருச்சி, மதுரை-தூத்துக்குடி, சேலம்-உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை உள்ளடக்கியது. விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் 38 சாவடிகளில் (செப்டம்பர் 1) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, மீதமுள்ளவை ஏப்ரல் 1-ல் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று வியாபாரிகள் மற்றும் சிறிய, மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் சாலைகளின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைப்பதோடு, 60 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது விதிமீறல் எனவும், இதை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
2023-24 ம் ஆண்டில், தமிழ்நாட்டில் மட்டும் சுங்கக் கட்டணமாக ரூ.4,221 கோடி வசூலிக்கப்பட்டது, ஆனால் சாலைகள் முறையாக பராமரிப்படவில்லை. வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை முறையாக ஏற்படுத்தவில்லை இது போன்ற விஷயங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அக்கறை கொள்ளவில்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் இந்த சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வை, அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை சுரண்டும் கட்டண உயர்வு என்றே கூறுகின்றனர்.
Related posts
Click to comment