கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த விவகாரம் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.
இந்த புகார் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கர்நாடக அரசு மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கோரிக்கை விடுத்தனர். அதேபோல கர்நாடக மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கர்நாடக முதல்வர் சித்தாராமையாவுக்கு கடிதம் எழுதி விசாரணைக்கு வலியுறுத்தினார். தொடர் அழுத்தங்களின் காரணமாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை – கொலைகள்
கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தர்மஸ்தலா கோவிலில் 1995 முதல் 2014 வரை கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கோயில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த ஒரு நபர், தான் பணிபுரிந்த காலகட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் உடல்களில் சித்தரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும், அவ்வாறு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டலுக்கு பயந்து கோவில் வளாகத்துக்கு அருகே புதைத்ததாகவும், அதில் ஒரு மாணவி பள்ளி சீருடையிலேயே இருந்ததாகவும், மேலும் சில ஆண்களின் பிணங்களையும் தானே புதைத்ததாக தனது புகாரில் பதிவு செய்துள்ளார்.

புகாருக்கான ஆதாரங்கள் என்ன.? குற்றவாளிகள் யார்.?
அவரது புகாரில் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் அதன்பின்னர் அவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததாகவும், அவர்களின் மிரட்டலுக்கு பயந்து இறந்தவர்களின் உடலை புதைத்ததாகவும் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில புகைப்பட ஆதாரங்களையும் மனித எலும்புகளையும் இணைத்துள்ளார். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கோவில் ஊழியர் தனது புகாரில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தனக்கு மேல் உள்ளவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாகவும் “குற்ற உணர்வோடு இனிமேலும் தன்னால் உயிரோடு இருக்க முடியாது என்பதால் சம்பவங்கள் குறித்து புகாரளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
புகார் ஜூலை 4 இம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரர் BNSS 183-ஐஎன் கீழ் நீதிபதி முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது தான் புதைத்த ஒரு உடலின் எச்சங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் இந்த பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறி அதிரவைத்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் பெண்கள் பில்லி சூனியம் போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டதாக கருதும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு நிவர்த்தி பெருவதற்காக வருவது குறிப்பிடத்தக்கது.
800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குறித்து பல ஆண்டுகளாகவே இது போன்ற சர்ச்சைகள் எழுவது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது. பல நூறு பெண்களின் மர்ம மரணக்கள் மர்மமாகவே மறைந்து கிடக்கிறது. 1985 முதல் இதுவரை காணாமல் போன பெண்கள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த புகாரும் நீர்த்துப்போகும் என்கின்றனனர்.
வழக்கு நீர்த்துப்போகுமா.?
இந்த கூற்றை வலுப்படுத்தும் விதமாக தூய்மைப்பணியாளரின் புகார் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் வயதான ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு தர்மஸ்தலாவில் மர்மமாக காணாமல் போன தனது மகளைப் பற்றிய தகவல்களை வேதனையோடு வெளியிட்டுள்ளார்.
அவரது வழக்கறிஞரோ, காணாமல் போன பெண் முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவியாவார். அவர் கடைசியாக கோவிலில் இருந்தே காணாமல் போனதாக அவரது தாயார் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி, காணாமல் போன பெண்ணின் தாயார் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை மாறாக, தூய்மைப்பணியாளர் அளித்த புகாரின் பேரில் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டால், டி.என்.ஏ பரிசோதனை நடத்துவதன் மூலம் தனது மகளின் உடல் கண்டறியப்பட்டால், மகளின் மரணத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்பதை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்மணி தனது மகளை காணவில்லை என்று புகாரளித்தும் இத்தனை வருடம் கர்நாடக காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்.? தர்மஸ்தலா கோவில் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்களா.? என்ற பல கேள்விகள் நம்முன் நிற்கிறது. இந்த பெண்மணியின் புகாரைப்போலவே தற்போதைய தூய்மைப்பணியாளரின் புகாரும் நீர்த்துபோகுமோ.? என்ற கேள்வி நமக்குள்ளும் எழுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட விசாரணை குழுக்கள்
இதுபோன்ற பயங்கர குற்றங்களுக்கு பின்னனியில் அதிகாரம் மிக்கவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை தடுக்கும் நோக்கில், இது போன்ற வழக்குகளை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிகாரமிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட விசாரணை குழுக்களை அமைத்து விசாரணையை நடத்த முன்வர வேண்டும்.
இந்த வழக்கை கர்நாடக அரசு முறையாக கையாளுமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.