திண்டிவனத்தில் பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் முனியப்பன் என்பவரை, திமுக பெண் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழ வைத்ததாக, எழுந்த புகார் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் முனியப்பன் என்பவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் கேட்ட கோப்புகளை எடுத்துக்கொடுக்கவில்லை இதன்காரணமாக திமுக கவுன்சிலர் ரம்யாவுக்கும் இளநிலை உதவியாளர் முனியப்பனுக்கும் மோதல் வெடித்துள்ளது. திமுக அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் மிரட்டலால் திமுக கவுன்சிலர் ரம்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் முனியப்பன். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், நகராட்சி ஆணையர் அறையில் கவுன்சிலர்கள் அதிகாரிகள் திமுக கவுன்சிலர் ரம்யா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். அப்போது முனியப்பன் திடீரென ரம்யாவின் காலில் விழுந்து தலை மீது அடித்துக்கொண்டு அழுவது பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சி வெளியில் கசிந்த நிலையில், திமுக அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் மீதும் “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பனை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த தி.மு.க கவுன்சிலர் ரம்யா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் மற்றும் நகராட்சி மேனேஜரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் சம்பவத்தை கண்டித்து, சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்த செயலில் ஈடுபட்ட நகர்மன்ற தலைவரின் கணவர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், திண்டிவனம் நகர்மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரனை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியிருந்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த திண்டிவனம் போலீசார் ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related posts
Click to comment