சிலைடு சிங்காரம் கடுப்பு கந்தசாமி..அரசியல் அரட்டை
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு குறித்து அதிமுக பாஜக தரப்பில் இருந்து முக்கிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லையே.? என்ற கேள்வியோடு வந்தமர்ந்தார் சிலைடு சிங்காரம்..

ஏற்கனவே ஏக கடுப்பில் இருந்த கடுப்பு கந்தசாமி ஏன்யா.? சிங்காரம் வரும்போதே கேள்வியோடுதான் வருவியா.? என்று கேட்டபடியே, டீ ஆர்டர் செய்துவிட்டு பேச்சை தொடர்ந்தார்.
பாஜகவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துவிட்டு டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி துணை ஜனாதிபதி சிபி.இராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்தினார். பின்னர் அமித்ஷாவை சந்திக்க வெகுநேரம் தனது கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் காத்திருந்த நிலையில், நிர்மலா சீதராமன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பழனிசாமி, இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் அவருடன் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம், தமிழகத்தில் பாஜக அதிமுகவுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், தொடர்பாக அமித்ஷாவுடன் பழனிசாமி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலை குறித்த விவகாரங்களும், தமிழக பாஜகவினர் தனக்கு எதிரான கருத்துகளை கூறுவது குறித்தும் எடுத்து கூறியிருக்கிறார். செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்பாக அதிக நேரம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அதிமுக நிர்வாகிககளை வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
பின்னர், பழனிசாமி மற்றும் அமித்ஷா மட்டும் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அதிமுக அதிருப்தியாளர்கள் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை பாஜக தரப்பில் தமிழகத்திலோ, டெல்லியிலோ பாஜக தலைவர்கள் சந்திக்க வேண்டாம் என்ற கோரிக்கையை அப்போது எடப்பாடி பழனிச்சாமி முவைத்துள்ளார்.
இதுபோன்ற சந்திப்புகளால் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிடுவதால் அவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இதன்காரணமாக, அதிமுக தொண்டர்கள் மத்தியில் தனது செல்வாக்கு குறைந்துவிடும் என்றும், பாஜக அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து விடும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளிவருகிறது. அதேவேளையில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் பாஜக கூட்டணியில் இருப்பது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. அதை பாஜகவே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார்.
அமித்ஷா தரப்பில், எடப்பாடி பழனிச்சாமிக்கு சில உறுதிமொழிகள் தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இனி தமிழக பாஜக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கும், அரசியலுக்கும், எதிராக பாஜகவினர் வாய் திறக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டதாம்.
செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.?
டெல்லியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், முன்னாள் எம்.பி சத்தியபாமா உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் எவ்வித கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.
டிடிவி தினகரனோ, ”தன்மானம்தான் முக்கியம் எனப் பேசும் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு சென்று ஆதரவு தேட வேண்டிய அவசியம் என்ன.? என கேள்வி எழுப்பியுள்ளார். ”தன்னை டெல்லி சரி செய்துவிடும் என பகல் கனவு காண வேண்டாம். அதிமுகவின் வாக்குகள் குறைந்து, அக்கட்சி தோல்வியடையும்” எனக் குறிப்பிட்ட டி.டி.வி.தினகரன், ”அதிமுக தோற்றால் அதற்கு தான் காரணமல்ல” என்று கூறியாட்டோடு, அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.
ஓபிஎஸ் – டிடிவி தினகரன் – செங்கோட்டையன் மூவரும் தனித்தனியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்தி வருவது வேதனையளிக்கிறது. விரைவில் மூவரும் ஆலோசித்து புதிய மாற்றத்திற்கான வேலைகளை தொடங்க வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனராம். விரைவில் புதிய அறிவிப்புகள் வரலாம்.
தமிழக பாஜாகவினர் மனநிலையில் இருக்கிறார்கள்.?

தமிழக பாஜக தலைவர் நிர்வாகிகளை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியின் போக்கிற்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறார்களாம். அண்ணாமலை இந்த நிமிடம் வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு செக் வைக்கும் வேலைகளிலேயே பிஸியாக இருக்ப்பதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை அனைவருமே, அதிமுக ஒருங்கிணைந்தால் தான் வெற்றி நிச்சயம் என்ற மனநிலையில் பேசி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜக கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல் சந்தோஷ் முன்னிலையில் பேசிய பாஜக நிர்வாகிகள் இதே கருத்தைதான் முன்வைத்திருக்கின்றனர். தென்மாவட்டங்களில் வெற்றி பெற ஓபிஎஸ், டிடிவி. தினகரன் ஆகியோர் முக்கியம் என்றே கருத்தை பதிவு செய்துள்ளனர். அவர்களின் கருத்தை உன்னிப்பாக கேட்டுக் கொண்டாராம்.எல்பி சந்தோஷ்.
அதிமுக, பாஜக என இரு கட்சிகளிலுமே உட்கட்சி பூசல் உச்சமடைந்திருக்கும் நிலையில், தவெக, திமுக என இருகட்சிகளின் பரபரப்பான தேர்தல் பணிகளை பார்ப்போம் சிங்காரம் என்றபடியே கிளம்பினார் கடுப்பு கந்தசாமி.