நெல்லை பாலைங்கோட்டையில், காதல் விவகாரத்தில், பட்டியலின இளைஞன் கவின், பெண்ணின் சகோதரன் சுர்ஜித்தால் கொடூரமாக வெட்டி ஆணவப்டுகொலை செய்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. கொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தின் கதறல் சத்தம் ஓய்வதற்குள் அடுத்த ஆணவபடுகொலை மயிலாடுதுறையை உலுக்கி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம், அருகே அடியாமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் வைரமுத்து. ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகியான வைரமுத்து மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். வைரமுத்து வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்த, குமார் – விஜயா தம்பதியினரின் மகள் மாலினி என்பவரை கடந்த சில வருடங்களாக வைரமுத்து காதலித்து வந்துள்ளார். மாலினி சென்னையில் ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வந்துள்ளார்.
காதலர்கள் வைரமுத்து – மாலினி இருவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாலினியின் தாயார் வேறு சமூகத்தை சேர்ந்தவர். இதன் காரணமாக மக்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டி வந்துள்ளார்.
வைரமுத்து – மாலினி காதல் விவகாரத்தால், இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று, வைரமுத்துவிடம் தனது மகள் மீதான காதலை கைவிட வேண்டும் என்று பிரச்னை செய்துள்ளார். இல்லையென்றால்.? என்கிற ரீதியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன்பின்னர், மாலினியின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில், வைரமுத்து மீது புகாரளித்துள்ளனர். இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து மயிலாடுதுறை போலிசார் விசாரணை செய்துள்ளனர். அப்போது மாலினி வைரமுத்துவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அறிவுரை வழங்கியபோது, கோபமடைந்த விஜயா தான் மகள் மாலினி இனி தனக்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மாலினியின் தாய் விஜயா, சித்தப்பா பாஸ்கரன் மற்றும் சகோதரர்கள் தங்கள் மகள் மாலினி தங்களுக்கு தேவையில்லை.என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து வைரமுத்து, தனது காதலி மாலினியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பணிபுரியும் இடத்தில் இருக்கும் சில ஆவணங்களை எடுப்பதற்காக மாலினி சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில், இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வைரமுத்துவை வழிமறித்த மர்ம நபர்கள் ஓடஓட விரட்டி, வைரமுத்துவை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில், வைரமுத்துவை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாலினியின் சகோதரர்கள் குணால், குகன், மாலினியின் சித்தப்பா பாஸ்கர் மற்றும் சுபாஷ் மற்றும் அன்புநிதி, கவியரசன், ஆகியோர் மீது வைரமுத்துவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றவர்களை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னரே, மாலினி குடும்பத்தினர் மாலினியை காதலை கைவிற்ற கூறி அடித்து உடைத்து கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையில் மாலினியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், நடந்த விசாரணையின் போதே, மாலினி போலீசாரிடம், ‘’தனது காதலனை தனது குடும்பத்தினர் ஏதாவது செய்து விடுவார்கள் பத்துக்கோங்க சார்’’ என்று கெஞ்சியதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற காதல் விவகாரங்களில் காவல்துறையினர் மெத்தனப்போக்கோடு செயல்படுவதாலேயே, இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடந்தேறி விடுகிறது என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
தமிழ அரசு, ஆணவப் படுகொலைகள் விவகாரத்தில், மெத்தனம் காட்டி வருவாதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், நெல்லையை அடுத்து மயிலாடுதுறையில் அதுவும் பட்டியலினத்திற்குள்ளேயே நடந்தேறிய இந்த ஆணவப்படுகொலை அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
Related posts
Click to comment