விஐபிக்களுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா.? திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு


பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து நிம்மதியான தரிசனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கோயில் நிர்வாகங்களும் இந்து சமய அரநிலையத்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் பக்தர்களை சீராமத்தில் தள்ளுவதாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை கோயில் கோபுரத்திற்கு முன்பாக வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றம் சென்ற நிலையில் உயர்நீதி மன்றம் அந்த பணிகளை செய்ய தடை விதித்து விசாரித்து வருகிறது. இதே போல பல கோவில்களில் பக்தர்கள் சிரமத்தை அனுபவித்து வரும் நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் இரண்டாவது படை வீடு ஆகும். இது தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே கோயில் இதுதான் என்பது இதன் தனிச்சிறப்பு.

இக்கோயிலின் மூலவர் சுப்பிரமணிய சுவாமி ஆவார். புராணங்களின்படி, முருகப்பெருமான் தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை எதிர்த்துப் போரிட்டு வென்று, அவனை ஆட்கொண்ட தலம் இதுவே ஆகும். சூரனை சம்ஹாரம் செய்தபின், முருகன் தனது வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்ததாக ஐதீகம். மூலவர் பாலசுப்பிரமணியரின் வலது கையில் தாமரை மலர் இருப்பதன் மூலம் அவர் சிவபெருமானைப் பூஜிக்கும் கோலம் உணர்த்தப்படுகிறது. முருகப்பெருமான் இங்கு தங்கி, வெற்றிச் சடங்குகளை நடத்தியதால், இத்தலம் ‘திருஜெயந்திபுரம் என்று பெயர்பெற்று பின்னர் காலப்போக்கில் ‘திருச்செந்தூர்’ என்று பெயர் மருவியது. இக்கோயில் குறித்து சங்க இலக்கியங்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகக் இக்கோயில் கருதப்படுகிறது.

இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி (கிழக்கு நோக்கியவர்) மற்றும் சண்முகர் (தெற்கு நோக்கியவர்) என இரண்டு மூலவர்கள் உள்ளனர். முருகப்பெருமான் கடலை நோக்கி கிழக்கு திசையில் காட்சியளித்தாலும், ராஜகோபுரம் கடல் அலைகளிலிருந்து காக்கும் பொருட்டு மேற்கு திசையில் அமைந்துள்ளது. சூரசம்ஹாரத்துக்கு முன், குருபகவான் (வியாழன்) அசுரர்களைப் பற்றிய தகவல்களை முருகனுக்கு உபதேசித்ததால், இத்தலம் ‘குரு தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிறப்பு வாய்ந்தவர்.

இங்கு சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள், நடராஜர் என பல உற்சவ மூர்த்திகள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் ஒரு சுரங்க அறையில் முருகன் பூஜித்த பஞ்சலிங்கங்கள் உள்ளன. திருச்செந்தூர் கோயிலின் மிக முக்கியமான சிறப்புகளில் ஒன்று நாழிக்கிணறு ஆகும். இது கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்குப் பிறகு தன் படைவீரர்களின் தாகம் தீர்க்க, தனது வேலைக் கடலில் குத்தி இந்த நாழிக்கிணற்றை உருவாக்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. கடல் நீரின் உப்புத்தன்மை அதிகம் உள்ள பகுதியிலும், இந்த நாழிக்கிணற்றுத் தண்ணீர் சுவையான நன்னீராக இருப்பது ஒரு வியப்பான அம்சமாகும்.

பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின்னர் நாழிக்கிணற்றில் நீராடுவது வழக்கம். ஐப்பசி மாதம் நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சி விமரிசையாக நடைபெறும். இந்த மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, முருகன் மும்மூர்த்திகளின் (சிவன், விஷ்ணு, பிரம்மா) அம்சமாக வெவ்வேறு நிற ஆடைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதிலும் சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், தொடர் விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வர். அவ்வாறு இந்த கோயிலுக்கு வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் விஐபி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் விஐபி பக்தர்கள் செல்லும் போது சாதாரண பக்தர்கள் மேலும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. விஐபி தரிசனம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.? விஐபிக்களுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பிய நீதிபதி, கோயில் இணை ஆணையர் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


banner

Related posts

கஞ்சாவை மறைக்க போலீசாருடன் கலவர நாடகம் நடத்திய கைதிகள் –4 பேர் மீது வழக்கு

Ambalam News

அமித்ஷாவும் செங்கோட்டையனும் என்ன பேசிக் கொண்டார்கள்.? இந்த கள்ளத்தனதுக்கு என்ன பெயர்..? – ஆ.ராசா விளாசல்..

Ambalam News

தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் – அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு

Ambalam News

Leave a Comment