செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வதால் இன்று 4 மணிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், முதற்கட்டமாக இன்று மாலை 4 மணி முதல் விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மாநகரின் நுங்கம்பாக்கம், வடபழனி, தேனாம்பேட்டை, அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை கிண்டி மீனம்பாக்கம் பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது .
பாரிமுனை, சேப்பாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். விட்டுவிட்டு பெய்யும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கத் தொடங்கியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 4 மணி அளவில் 100 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை உள்ளிட்ட அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (21.10.2025) நீர் இருப்பு 20.20 அடியாகவும், கொள்ளளவு 2653 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 796 கனஅடியாக உள்ளது.
கடந்த வருடம் 21.10.2024 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 14.14 அடியாகவும் கொள்ளளவு 1378 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையிலும் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருவதினாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளின் வகைப்பாடு மாற்றத்தினால் மிகை வெள்ளநீர் (Flash flood) பெறப்பட வாய்ப்பு உள்ளதினால், நீர்த்தேக்கத்தின் வெள்ள கொள்ளளவை கூடுதலாக உயர்த்த வேண்டியுள்ளது. எனவே, நீர்த்தேக்க மட்டத்தினை 21 அடியாக பராமரிப்பது வெள்ள மேலாண்மைக்கு ஏதுவாகவும், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து இன்று 21.10.2025 மாலை 4.00 மணியளவில் விநாடிக்கு 100 கனஅடி வெள்ள நீரினை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.