சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி… அரசியல் அரட்டை
நாளை ‘’பத்திரிகையாளர்களை சந்திப்பார்’’ என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், ‘’ஹரித்துவாருக்கு ராமரை தரிசிக்க போகிறேன்’’ என்று, திடீரென டெல்லி புறப்பட்டிருக்கிறாரே.? செங்கோட்டையன், என்ற கேள்வியை கேட்டபடியே, வந்து அமர்ந்தார் சிலைடு சிங்காரம்..
என்னாய்யா எதுவும் புரியாத மாதிரியே கேக்குற..? அதென்னமோ தெரியலயா.? திடீர்னு செங்கோட்டையனுக்கு ராமர் மேல கொஞ்ச நாளாவே பக்தி முத்திடுச்சாம்.? கேக்குறவன் கேனையானா இருந்தா.? சரி அதவிடு.., எப்பவும் போலதான், அதிமுகவை டெல்லிதானே ஆட்டுவித்து கொண்டிருக்கிறது..!? அப்ப அவங்கதானே சமாதானமோ.? பஞ்சாயத்தோ.? பண்ணி வைக்கணும். டெல்லியில் இருந்து அழைப்பு வந்திருக்கும் கிளம்பியிருப்பாரு.. ஏற்கனவே அப்பாயின்மெண்ட் கேட்டதாக தகவல் வந்ததே.. கோபிசெட்டிபாளையத்தில் கூட்டத்தை கூட்டி, அதிமுக தொண்டர்கள் மத்தியில் தனது இருக்கும் செல்வாக்கை வேறு டெல்லிக்கு காட்டியிருக்கிறார். அழைக்காமல் இருப்பார்களா.?
பிரிந்தவர்களை ஒன்றிணைத்து விடுவாரா.? அதிமுகவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்.? பாஜக மூவ் எடப்படியாருக்கு எதிராக இருக்குமா.?
கட்சியில் செங்கோட்டையன் சேர்க்கப்பட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்க, தமிழக பாஜக நிர்வாகிகள் சிலர் தேசிய பாஜக தலைவைகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். அதிமுகவுக்குள் எடப்பாடியாரின் கை ஓங்குவது என்றைக்கும், பாஜகவுக்கு நல்லதல்ல என்று தேசிய தலைவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பாஜக எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தும் நிலையில், பழனிச்சாமி தரப்பில் ஓபிஎஸ், டிடிவி. தினகரன், சசிகலாவை தவிர்த்து மற்ற சிலரை சேர்த்துக்கொள்வதில் பிரச்னை இல்லை என்ற கோரிக்கை முன்வைக்கப்படும். செங்கோட்டையன் தரப்பில் முக்கிய பொறுப்பு கேட்கப்படுவதோடு, மற்றவர்களை கழற்றிவிட்டு விட்டு அதிமுக விசுவாசிகள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று முடித்து விடுவார். இதுதான் அதிமுகவின் முக்கிய நகர்வு.
எடப்பாடியாரும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கமுடியாது. செங்கோட்டையன் மீதான தனது நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக தரப்பில் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்த எடப்பாடிக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.! நயினார் நாகேந்திரன் கூட ஆதரிக்கவில்லை. ஒன்றிணைந்தால் நல்லது என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டு விட்டார்.
செங்கோட்டையனின் காய் நகர்த்தல்களுக்கு பின்னனியில் பாஜக இருப்பதாக சில அதிமுக நிர்வாகிகளே முனுமுனுக்கின்றனர். அதிமுகவை கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள, எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும், தனக்கு நம்பகமான செங்கோட்டையனை வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக கடிவாளம் போடுகிறது என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.
பாஜகவின் சிலீப்பர் செல்லாக மாறிவிட்டாரா.? செங்கோட்டையன்.?
வியப்பு.! கேள்வி.? எதற்கும் அரசியலில் இடமில்லை சிலைடு சிங்காரம்.. அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கு 2 முறை சி.எம் வாய்ப்பு வந்த போதும் ஒதுங்கிக்கொண்டார். அப்படிபட்ட ஒரு மூத்த நிர்வாகியை அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி உதாசீனப்படுத்தி ஓரங்கட்ட நினைத்தால், இயல்பாகவே கோபம் வரத்தானே செய்யும்.?
அப்போது தனது அரசியல் மூவ்களுக்கு யார் ஆதரவு அளிக்கிறார்களோ.? அவர்களை ஒன்றிணைத்துக்கொண்டு, யாரால் உதவ முடியுமோ.? அவர்கள் பின்னால் செல்வது தானே அரசியலின் அடுத்த கட்டம் அதைத்தான் செங்கோட்டையன் பின்பற்றியிருக்கிறார். இதில் வியப்பொன்றும் இல்லை.
இதில் பாஜக அவரை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. அது பாஜகவின் அரசியல். எடப்பாடியாரின் முந்தைய முடிவுகளே அவருக்கு பிரச்னையை கொடுத்திருக்கிறது. ஓபிஎஸ் டிடிவி. தினகரன் விஷயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று கூறிதான் எடப்பாடி பழனிசாமியோடு பாஜக கூட்டணி வைத்தது.
கூட்டணி அமைந்தபின் செங்கோட்டையன் விவகாராம் பூதாகரமாக வெடித்தது. அதில், இப்போது பாஜக தலையிடுவதில் அர்த்தமிருக்கிறது. முந்தைய கூட்டணி ஒப்பந்தங்கள் பாஜகவை கட்டுப்படுத்தாது. எடப்படி பழனிச்சாமி செங்கோட்டையன் மோதலால் கூட்டணி பாலகீனமடையுமானால், அது தேர்தலில் பாஜகவையும் பாதிக்கும் இதை முன்னிறுத்தி, பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு கடிவாளம் போடுவது தவறில்லை. இவற்றையெல்லாம் முன்பே எடப்பாடி பழனிசாமி யோசித்திருக்க வேண்டும்.
அப்போ.. ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சசிகலா நிலை.?
அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். செங்கோட்டையன் சசிகலாவை பல முறை சந்தித்ததாக கூறப்படுகிறது. பாஜக தயவை பயன்படுத்தி சசிகலா, ஓபிஎஸ், டிடிவி. தினகரனை உள்ளே கொண்டுவந்து விடலாம் என்று தனிப்பட்ட முறையில், செங்கோட்டையன் கணக்கு போட்டு முடிவெடுத்திருக்கலாம்.
செங்கோட்டையன் விவகாரத்தை தொடங்கிய நிலையில், சசிகலா செங்கோட்டையனுக்கு ஆதரவளித்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே சுகர் பேக்டரி விவகாராம் தூசுதட்டப்பட்டது. சசிகலாவுக்கு எப்போதும் பாஜக ஆதரவளிக்காது என்று, அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியது பாஜக என்றுதான் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நடவடிக்கையால் முந்தைய கூட்டணி ஒப்பந்தம் மீறப்படவில்லை என்று எடப்படி பழனிசாமிக்கும் பாஜக உணர்த்தியிருக்கிறது.
ஆக செங்கோட்டையானால் டிடிவி.தினகரன். ஓபிஎஸ். சசிகலா மூவரையும் அதிமுகவுக்குள் கொண்டு வர முடியாது. இருப்பினும் ஓபிஎஸ்ஸை அதிமுகவுக்குள் கொண்டுவரும், விஷயத்தில் செங்கோட்டையன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆக, சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவிற்குள் இடமில்லை அவர்கள் ஆதரவாளர்கள் வேண்டுமானால், நிபந்தனைகளோடு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எடப்பாடியாருக்கு வேறு வழியில்லை.
செங்கோட்டையனும் அதிமுகவில் தன்னுடைய முக்கியத்துவம், தனது ஆதரவாளர்களுக்கான முக்கியத்துவம் இத்தோடு முடித்துக் கொள்வார்.
இதற்கு, பாஜக தனக்கு முழு ஆதரவு கொடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை நிர்பந்தித்து ஒத்துக்கொள்ள வைக்கவில்லை என்றாலோ, இதற்கு எடப்பாடி தரப்பு ஒத்துவரவில்லை என்றாலோ, ஓபிஎஸ், டிடிவி.தினகரன். சசிகலா என அனைத்து அணிகளையும் ஒன்றிணைத்து தனி அணி. இதுதான் செங்கோட்டையனின் அடுத்த ப்ளான்.
இந்த விஷயத்தில் செங்கோட்டையனை பாஜக கட்டுப்படுத்த முடியாது. தனது அருமையான காய் நகர்த்தல்களால் எடப்படி பழனிச்சாமிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் தலைவலியை கொடுத்திருக்கிறார் செங்கோட்டையன்.
அவரளவில், அவர் சிலீப்பர் செல் அல்ல.. அரசியல் சூத்திரதாரி. அடுத்து என்ன நடக்குது.?ன்னு பொறுத்திருந்து பார்ப்போம் சிலைடு சிங்காரம்
Related posts
Click to comment