எடப்பாடி பழனிச்சாமியால் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு அதிமுகவில் இருந்து தனித்து விடப்பட்ட ஓபிஎஸ் பலமுறை காலில் விலாத குறையாக மன்றாடியும் அவரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.
பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் முன்வைத்த பகிரங்க கோரிக்கைக்குப் பிறகும்கூட அந்த வேண்டுகோளைப் புறந்தள்ளி விட்டார் எடப்பாடி பழனிசாமி.
தர்மயுத்ததிற்கு பிறகு பிளவுபட்டு நின்ற ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பை அன்று சமாதானம்.? செய்து வைத்தது பாஜக. அன்றைய கவர்னர் வித்யாசாகர் மேடையில் இருவர் கைகளையும் இணைத்து வைத்து அதிமுகவை ஒருங்கிணைத்து வைத்தார். பின்பு இருவருக்குள்ளும் எழுந்த அதிகார யுத்தத்தால் வீழ்த்தப்பட்டார் ஓபிஎஸ்.
மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்ட வேண்டும் என்ற அவரது திட்டத்திற்கு இந்தமுறை பாஜக உதவும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்து கொண்டு, அரசியலில் தனக்காகவும் தனது ஆதரவாளர்களுக்காகவும் புதிய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, போன்றோருக்கு எந்த காலத்திலும் அதிமுகவுக்குள் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியதோடு, அவர்களுடைய ஆதரவாளர்களை கலைக்கும் விதமாக ஓபிஎஸ், சசிகலா, தினகரன், ஆகியோர் பாஜக கூட்டணியில் இருப்பதாக கூட தெரியவில்லை என்று கூறினார். இபிஎஸ் இவ்வாறு பேசியது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் தரப்புக்கு தகுந்த பாடம் புகட்டும் அளவுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று ஒபிஎஸ்க்கு நெருக்கடி கொடுத்துவருவதாக தகவல்கள் கசிகிறது. ஒபிஎஸ்ஸும் அதே மனநிலையில் தான் காய் நகர்த்தி வருகிறார் என்கின்றனர் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள்.
ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணியை இது தலைவர்களுக்கான கூட்டணி அதிமுக தொண்டர்களுக்கான கூட்டணி இல்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திமுகவில் இணைந்து விட்டார். பாஜக – அதிமுக கூட்டணி அதிமுக கூடாரத்திற்குள் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவையனைத்தையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள நினைக்கிறார் ஓபிஎஸ்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் புதிய கட்சி தொடங்கினால் தனக்கான உரிமை பறிபோய்விடும் என்ற என்னத்தாலேயே புதிய கட்சி தொடங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டு வருகிறார் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு தொண்டர்கள். இவற்றையெல்லாம் மனதில் வைத்தே ‘’அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’’ என்ற அடையாளத்தோடு செயல்பட முடிவெடுத்திருக்கிறார் ஓபிஎஸ் என்கின்றனர்.
அதே சமயத்தில் தன்னை கழட்டிவிட்ட பாஜக தரப்பு மீது கடுமையான மனவருத்தத்தில் ஓபிஎஸ் இருப்பதாக அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பதவிக்கு வருகிறோமோ.? இல்லையோ? தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை ஓபிஎஸ் தவிடு பொடியாக்குவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஒபிஎஸ் தனித்து தேர்தலில் களமிறங்கினால் அதிமுகவின் வெற்றி கேள்விக்குறிதான் என்கின்றனர். மேலும் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு உதாரணமாக கடந்த தேர்தல்களில் அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதத்தை மேற்கோள் காட்டுகின்றனர்.உதாரணமாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தனர். அந்த தேர்தலில் தமிழகம் முழுவதுமாக அதிமுக பெற்ற வாக்கு 33.03 சதவீதம். அதே சமயம் அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில் சந்தித்த 2024 மக்களவைத் தேர்தலில், அதிமுக பெற்ற வாக்கு 20.07 சதவீதம் கிட்டத்தட்ட 12.06 சதவிகித வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. அதே சமயம் தென் மாவட்டங்களில் மக்களவை தேர்தலில் அதிகபட்ச வாக்குகளை அதிமுக இழந்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வருகின்ற தேர்தலில் ஒபிஎஸ் தனி கட்சி ஆரம்பித்து களமிறங்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் தனித்து தேர்தலில் நின்றாலும், மாற்றுக் கட்சியினருடன் கூட்டணி என்கிற ரீதியில் களமிறங்கினாலும், அதிமுகவுக்கு வெற்றி என்பது சாத்தியமில்லை என்கின்றனர்.
ஒபிஎஸ் ஆதரவாளர்களோ, ‘’மக்களை காப்போம்’’ ‘’தமிழகத்தி மீட்போம்’’ என்கிற எடப்பாடி பழனிச்சாமி முதலில் கட்சியை காப்பாற்றிக்கொள்ள சொல்லுங்கள் என்கின்றனர்.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களையும், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் மீது அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களையும், அதிமுக பாஜக கூட்டணி அதிருப்தியாளர்களையும், ஒருங்கிணைத்து மாபெரும் மாநாட்டை நடத்தும் திட்டத்தில் ஒபிஎஸ் இருப்பதாக கூறுகின்றனர்.
‘’வருகின்ற சட்டமன்ற தேர்தல் களம்’’ ‘’அதிமுகவுக்கு சோதனைக்காலம்’’ என்கின்றனர் மாற்றுக் கட்சியினர்.