மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு | ஆய்வாளர் உட்பட 6 பேரை சஸ்பெண்ட் செய்த டி.ஐ.ஜி. மணிவண்ணன்.. வழக்கில் விடை தெரியாத பல மர்மங்கள்..


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை – கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் உள்ளவர்களுடன் ஏற்ப்பட்ட தகராறில் மானாமதுரை சீயோன்நகரில் சாலையில் நடந்து சென்றவர்களை அரிவாளால் வெட்டியுள்ளார். இதன் காரணமாக மானாமதுரை காவல்துறையினரால் 6-3-2026 அன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கைது நடவடிக்கையின்போது போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் கீழே விழுந்து, அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால் காயத்துக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆகாஷ், 8-3-2026 அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், போலீஸார் அடித்ததால்தான் ஆகாஷ் இறந்துவிட்டதாகக் கூறி அவருடைய பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் கடந்த 4 நாள்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், ஆகாஷ் மரண விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு விசாரணை நடந்தது.

கடந்த 6 ஆம் தேதி ஆகாஷ் கால்முறிவு சிகிச்சைகாக சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும்போது, மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆகாஷ் டெலிசனிடம் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்.

அந்த வாக்குமூலமானது இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில் ஆகாஷ் டெலிசன் கூறியிருப்பதாவது, “என்னை மதியம் 1.30 மணியளவில் கிளங்காட்டூரில் கருவேலம் மரத்திற்கு கீழே குணாவுடன் அமர்ந்து இருந்த போது, சீருடையில் இல்லாத 10 நபர்கள் வந்து பிடித்தார்கள்.

எங்கள் இருவரையும் வேலூர் முருகபஞ்சான் ரோட்டிற்கு அழைத்து வந்து, மதிய சாப்பாடு வாங்கித் தந்து மாலை 04:30 மணி வரை அங்கேயே அமர்ந்திருந்தோம். சிவகங்கை சாலையில் என்னை வேறு காரில் குணாவுடன் ஏற்றி, சீருடையில் இருந்த 4 போலீஸார் வெள்ளை துணியைக் கொண்டு கண்களைக் கட்டினார்கள். கண்ணைக் கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்துச் சென்றார்கள். என்னை அமர வைத்தார்கள்.

எனது கெரண்ட காலிற்கு கீழேயும், முட்டிக்குக் கீழேயும் இரண்டு கற்களை வைத்தார்கள். ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டார்கள். இரும்புக் கம்பியால் எனது வலது காலில் ஓங்கி ஒரு முறை அடித்தார்கள். அடித்தவுடன் எலும்பு முறிந்து வெளியே வந்து ரத்தம் வந்தது. அடித்தவுடன் நான் வலியில் துடித்தேன். அதற்குப் பின் என் கண்ணை கழட்டி விட்டார்கள். அங்கிருந்து என்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கிருந்து மருத்துவர் என்ன என்று கேட்ட போது, நான் மேலப்பசலை பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக போலீஸார் என்னை மிரட்டிக் கூறச் சொன்னதன் பேரில், பயத்தில் கூறினேன். அதன் பின் என்னை மாலை 6:30 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். கண் கட்டி இருந்ததால், என்னை யார் அடித்தார்கள் என்று எனக்கு தெரியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது SC ST பிரிவின் கீழ் வழக்கு மாற்றம் செய்ய சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகாஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

போராட்டங்களின் தொடர்ச்சியாக ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் திலீபன், எஸ்.ஐ குகன், 4 காவலர்கள் தெய்வேந்திரன், மனோகரன், சரத், காளீஸ்வரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம், சிவகங்கை சரக டிஐஜி மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆகாஷ் ஏன் மோதலில் ஈடுபட்டார்.? அவரால் அரிவாளால் வெட்டப்பட்ட அல்லது தாக்கப்பட்ட நபர்களுக்கும் இருந்த முன் விரோதம் என்ன.? அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்து மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றபோது ஆகாஷ் தெரிவித்துள்ளாரா.? இந்த காயங்கள் போலீசார் தாக்கியதால் ஏற்பட்டதா.? அல்லது ஆகாஷ் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட முனைந்தபோது ஏற்பட்டதா.? அரசியல் நெருக்கடியால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா.? காவல்துறையினர் மரணம் ஏற்படும் அளவிற்கு தாக்கினனார்களா.? சமூக ஆர்வலர்களின் இது போன்ற கேள்விகளுக்கு பதிலின்றி மர்மமாகவே நகர்கிறது ஆகாஷின் மரண வழக்கு


banner

Related posts

நீதித்துறையில் சாதி மத பாகுபாடா.? வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரம் – ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி

Admin

திருச்சி : காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை..

Ambalam News

பொன்முடியின் சர்ச்சை பேச்சு.. வீடியோவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

Leave a Comment