பள்ளிக்கரணை சதுப்பு நிலம் | திமுக v/s அதிமுக.. சதுப்புநில பகுதியை சுற்றி குடியிருப்புகள் கட்ட தடை விதிக்க கோரிய அதிமுக மனு தள்ளுபடி


சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் ‘ராம்சார் ஒப்பந்தப்படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும். இதன்படி ‘ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்திலோ, அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது’ என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு எண். OA No. 91, நாள் 24.9.2025 அன்று வழங்கிய தீர்ப்பினை CMDA தன்னுடைய அலுவலர்களுக்கு 6.10.2025 அன்று சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க சதுப்பு நிலங்கள் உயிர்நாடியாக திகழ்கின்றன என்ற காரணத்தினால், அவற்றை வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நியதியாகும். இதை திமுக அரசு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை ‘பிரிகேட்’ என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு மீது குற்றச்சாட்டை வீசியிருந்தார்.

இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று அதிமுக மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருத்து.

அதேபோல அறப்போர் இயக்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கும் வகையில், அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்தவிதமான புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அரசு அனுமதி அளிக்கக் கூடாது. சதுப்பு நிலப்பகுதியில் பல அடுக்கு குடியிருப்பு வளாகங்கள் கட்ட ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டுமானங்களால் சதுப்பு நிலத்தின் இயற்கைத்தன்மை அழிந்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடுகையில், ஆக்கிரமிப்பு அகற்றுதல்: சதுப்பு நிலப்பரப்பு தொடர்ந்து சுருங்கி வருவதால், ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்க வேண்டும். முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு இன்றி வழங்கப்பட்ட கட்டுமான அனுமதிகளைச் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். சதுப்பு நிலம் என்பது நகரின் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய காரணி என்பதால், அங்கு வணிக ரீதியான திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சதுப்பு நிலத்தை துல்லியமாக வரையறை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு, பிப்ரவரி 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள போது, உயர் நீதிமன்றத்தில் இணையான விசாரணை நடத்த முடியாது என்பதால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறிய நீதிபதிகள், அதிமுக நிர்வாகியும், அறப்போர் இயக்கமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியிருக்கிறது.


banner

Related posts

விஜய்யிடம் பேசிய ராகுல்காந்தி.. காங்கிரஸுடன் தவெக கூட்டணி.? விஜய் மிரட்டப்பட்டாரா.? கரூர் வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி வேணுகோபால்

Ambalam News

கடன் தொல்லை மூன்று பெண் குழந்தைகளை கொடூரமாக கொன்று தந்தை தற்கொலை..

Ambalam News

ஆர்.‌எஸ்.‌எஸ்க்கு எடப்பாடி பழனிச்சாமி சிவப்பு கம்பள வேரவேற்பு கொடுக்கிறார். விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – தொல். திருமாவளவன்

Ambalam News

Leave a Comment