கொங்கு மண்டலத்தில் எப்பவுமே நாங்கதான்.. ”கொங்கு மண்டலம்” அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்டது வந்த நிலையில், கொங்கு மண்டலத்தை கைப்பற்ற, அதிமுகவின் அரசியல் கணக்குகளை நன்கறிந்த செந்தில் பாலாஜியை களத்தில் இறக்கி கலங்கடித்திருக்கிறது திமுக.
சமீப காலமாக அதிமுகவை அடுத்து, கோவையில் பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், பாஜக வென்ற தொகுதியில் செந்தில் பாலாஜியை நிறுத்தி, இரு கட்சிகளுக்கும் செக் வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நோக்கத்தோடு செந்தில் பாலாஜியை களத்தில் இறக்கி விட்டிருக்கிறது திமுக தலைமை. இந்த திட்டத்தை திமுக தலைமையிடம் எடுத்துக் கூறி, இந்த தொகுதியை கேட்டுதான் வாங்கினார் செந்தில் பாலாஜி. திமுக தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றவும்,அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டவும், பாஜக வென்ற கொங்கு மண்டலத்தின் டாஃப்பான கோவை (தெற்கு) தொகுதியில் அதிமுகவை திணறடித்து வெற்றி பெரும் நோக்கோடு தான் களமிறங்கியிருக்கிறார் செந்தில் பாலாஜி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்
அறிவாலயத்தில் இருந்து இந்தமுறை வெளியான வேட்பாளர் பட்டியலில், பல சுவாரசியங்கள் இருந்தன. திமுக வேட்பாளர்கள் நேரடியாக 164 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியில் உதயசூரியன் சின்னத்தில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சுமார் 80% படித்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 பேர் பெண்கள். இதில், 125 பட்டதாரிகள்.. அதில் 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், சட்டம் படித்தவர்கள் 29 பேர், மருத்துவர்கள் 15 பேர். அதேபோல் 4 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே அரசியலில் ‘ரிஸ்க்’ எடுப்பதில் கில்லாடியான செந்தில் பாலாஜி, தனது சொந்த ஊரான கரூரை விட்டுவிட்டு, அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் மண்டலத்தில் திமுகவை திணறடிக்கும் ஒரு தொகுதியைத் தேடிப்பிடித்து தலைமையிடம் கேட்டே வாங்கியிருப்பதாகவும், இதன் பின்னணியில் ஒரு மாபெரும் அரசியல் ஸ்கெட்ச் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கடந்த முறை பாஜக வெற்றி பெற்ற தொகுதி, அதற்கு முன்னால் இரண்டு முறை அதிமுகவின் வசம் இருந்த தொகுதி. இந்த தொகுதியை எதிர் முகாமிடம் இருந்து தட்டி பறிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது.
கோவையை அதிமுகவின் கோட்டை என்று சொல்வதை அடியோடு மாற்ற வேண்டும். அதைச் செய்ய வேண்டுமானால், அந்தக் கோட்டையின் மையப்பகுதியிலேயே நேரடியாக மோத வேண்டும்” அதற்காக நான் களமிறங்க வேண்டும் என்று கூறிய, செந்தில் பாலாஜி அதற்கான அசைன்மென்டயும் தலைமையிடம் கூறி அந்த தொகுதியை கேட்டுபெற்றுள்ளார்.
அதிமுக தரப்பில் அம்மன் அர்ஜுனன் களம் இறக்கப்பட்டுள்ளார். கோவை மக்களின் நாடித் துடிப்பு தெரிந்தவர், ஏற்கனவே வெற்றி பெற்றவர் என அதிமுக தெம்பாக இருக்கிறது. ஆனால், செந்தில் பாலாஜியின் தேர்தல் களப்பணிகளுக்கு அதிமுகவும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனும் தாக்குபிடிப்பார்களா.? என்ற கேள்வி கோவை தெற்கு தொகுதியில் இப்போதே ஒலிக்க தொடங்கி இருக்கிறது என்கின்றனர் உடன்பிறப்புகள்.
திமுகவின் செந்தில் பாலாஜி தேர்தல் வேளைகளில் சிறந்த நிபுணர் என்கின்றனர் அவரை நன்கறிந்தவர்கள். அதே சமயம் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தொகுதி செல்வாக்கு மற்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் பலம் கொண்டவர். களத்தில் அனல் பறக்க இதைவிட வேறு என்ன வேண்டும் என்கின்றனர் தொகுதி மக்கள்.
கரூரைத் தாண்டி கோவை அரசியலில் திமுகவின் செந்தில் பாலாஜி காலூன்றுவது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இங்கு லோக்சபா தேர்தல் பணிகளை வெற்றிகரமாக செய்து அதிமுகவுக்கு சரிவை காட்டியவர். .
கொங்கு மண்டலத்தில் அதிமுக – திமுக இடையே கோவை மாநகரின் மையத்தில் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. களத்தில் தனது அரசியல் வியூகங்களை கீழ் மட்டத்தில் இருந்து நகர்த்த ஆரம்பித்துவிட்டார் செந்தில் பாலாஜி. அவருடைய அரசியல் மூவ்மெண்ட் அதிமுகவை திணறடிக்கும் என்கின்றனர் கோவை திமுகவினர்.
பாஜக வென்ற தொகுதியில், அதிமுகவின் பலத்தையும் தாண்டி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக கோட்டையான கொங்கு மண்டல கோட்டையை தகர்த்து கைப்பற்றுவாரா.? செந்தில் பாலாஜி
இது சாதாரணமாக திமுக அதிமுக வேட்பாளர்களுக்குள்ளான போட்டி அல்ல. திமுக தலைமைக்கு அதிமுக தலைமைக்குமான கௌரவத்திற்கான போட்டி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கோவை (தெற்கு) தொகுதி அனல் பறக்கும் தொகுதியாக மாறியிருக்கிறது.
அம்பலம் செய்திக் குழு

