அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும். அதன் அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பு என்பது இந்த நேரத்தில் முக்கியம். அதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பம். 10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அதிமுக-வை ஒன்றிணைக்க வேண்டும். இல்லையென்றால் என்னைபோன்ற மனநிலையில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்குவேன் என்றும் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முக்கிய தலைவர்களோடு ஆலோசனை நடத்தினார். தற்போது, செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகலிருந்து நீக்கப்படுவதாகவும், மேலும், அவரது ஆதரவாளர்களான, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளையும் நீக்குவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தினேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்தைக் கூறினேன்.
கட்சிப் பொறுப்புகளிலிருந்து என்னை நீக்கியதற்கு வருத்தம் இல்லை. எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்
எடப்பாடி பழனிசாமியின் பதவி நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது