உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 78 வயதான நைனா. இவர் நிலபிரச்னை தொடர்பான விசாரணைக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு சென்றுவந்த நிலையில், தனது நிலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முதியவர் நைனா இவருக்கும் இவரது சகோதரனின் மனைவி சரிதா என்பவருக்கும் நில தகராறு இருந்துள்ளது. இது சம்மந்தமாக தகராறு ஏற்பட்ட நிலையில், சரிதா திருநாவலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது சகோதனின் மனைவி சரிதா திருநாவலூர் காவல்நிலையத்தில் தான் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் எனவும் அந்த பொய் புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மிரட்டுவதால் தற்கொலை முடிவை எடுத்ததாக, மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தனது நிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட முதியவர் நைனாவின் உடலை கைப்பற்றிய திருநாவலூர் போலீசார் அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு உடட்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட நைனாவின் மனைவி பழனியம்மாள் திருநாவலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, தற்போது முதியவர் நைனாவை தற்கொலைக்கு தூண்டியதாக திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை விவகாரத்தை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.