சுத்தம், சுகாதாரம், டெங்கு கொசு ஒழிப்பு, நோய் தொற்று தடுப்பு, ஆரோக்கியம், இப்படி பேசுகிற மாநகராட்சி தான் அடுத்தவன் விட்டு வாசலில் குப்பைத் தொட்டியை வைத்து விட்டு போகிறது.!
அவர்கள் மீது அப்படி என்ன வெறுப்போ.? எத்தனை முறை புகாரளித்து கெஞ்சி கூத்தாடி காலில் விழுந்தாலும், அந்த குப்பைத்தொட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றமாட்டார்கள். பொதுமக்களும் குப்பைத்தொட்டி அருகே வீடுகள் இருக்கிறதே.? என்று நினைக்காமல் தூர இருந்தே, குப்பையை தூக்கி வீசிவிட்டு செல்கிறார்கள். எவ்வளவு குரூர எண்ணம் இருந்தால் இப்படி செய்வார்கள். அந்த வீட்டில் குழந்தைகள், முதிவர்கள், நோயாளிகள் இருக்க மாட்டார்களா.? மாநகராட்சி வீடுகளுக்கே வந்து குப்பைகளை வாங்குவோம் என்று கூறிய பின்னர், எதற்கு தெருக்களில் அடுத்தவர் வீடுகளுக்கு முன்பு இத்தனை குப்பைத்தொட்டிகள்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஐ.பி.எஸ் அதிகாரிகள், நீதிபதிகள், அமைச்சர்கள், மேயர், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ வீடுகள் அருகில் இது போன்று குப்பைத்தொட்டிகளை வைப்பார்களா.? அடுத்தவன் விட்டு வாசலில் குப்பைத்தொட்டியை வைக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? இப்படியான கண்டனக் குரல்களுக்கு மேயரும் மாநகராட்சி, ஆணையரும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
மேலே உள்ள புகைப்படம் சென்னை வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலம் தொடங்கும் டாக்டர் விஜயராகவலு சாலையில் எடுக்கப்பட்டது.
ஒரு வீட்டு வாசலுக்கு ஒரு குப்பைத் தொட்டியே போதுமானது என்ற நிலையில், ஒரு தெருவில், ஒரு வீட்டின் முன்புறத்தில், வரிசையாக இத்தனை குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.
குப்பைத் தொட்டிகளின் அணிவகுப்பு ஒருபக்கம் இருக்க, அதையும் தாண்டி; குப்பைத் தொட்டிகளுக்குப் பக்கத்தில், கீழே கொட்டியுள்ள குப்பைகளை அள்ள வந்திருக்கும் தூய்மைப் பணியாளர் நிலையை எண்ணிப் பாருங்கள். கனத்த மழைப்பொழிவு உண்டானால் இவர்கள் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.?
சில வாரங்களுக்கு முன்பு, வண்ணப் பூச்சு அடித்து புதுப்பிக்கப்பட்ட பூங்கா சுற்றுப்பாதை வளைவும், பேருந்துகள் திரும்பும் இடமும் இந்த பாய்ன்ட்டில்தான் உள்ளது என்பது சிறப்புத் தகவல்.
குப்பைத் தொட்டிகளுக்கு முன்னால் இருக்கும் வீடுகளில் வசிக்கிறவர்கள், வாயற்ற மனிதர்கள்.! “எதையாவது வந்து கொட்டிட்டுப் போங்கப்பா.! நாத்தத்துல, கொசுக்கடியில செத்தாலும் சாவறோம்; உங்கக்கிட்ட சம்பவம் எதுவும் வேணாம்” என்று ஒதுங்கிப் போய் விட்டார்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
குப்பைத் தொட்டியை வேறு எங்குதான் கொண்டு சென்று வைப்பது.? என்ற கேள்வியை முன் வைக்காமல், சென்னை மாநகராட்சி மழைக்கு முன்னர் சுகாதார கேடுகளை விளைவிக்கும் விஷயங்களில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கையாக, அடுத்தவர்கள் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், கோவிலகள் மக்கள் கூடும் இடங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சுகாதார சீர்கேட்டுக்கு எதிராக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நடவடிக்கை எடுப்பாரா.?
Related posts
Click to comment