திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணி கட்சிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தொகுதி பங்கீட்டிடை முடித்து இறுதி செய்திருக்கிறது. திமுக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மாற்றுக்கட்சிகளில் இருந்து குறிப்பாக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களாக இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக தலைமை. அந்த வகையில் அதிமுகவில் இருந்து விலகி தனி இயக்கம் ஆரம்பித்து பின்னர் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியிருக்கிறது. பலமுறை அதிமுக சார்பில் இங்கிருந்து வென்ற ஓபிஎஸ், தற்போது திமுக சின்னத்தில் போட்டியிடுவது அந்தத் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் செல்வாக்குமிக்க தலைவரான ஆர்.வைத்திலிங்கம் அதிமுகவில் நீண்ட காலம் அமைச்சராகவும், முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தவர். தற்போது திமுக வேட்பாளராக ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வைத்திலிங்கம் கடந்த 2001 முதல் 2011 வரை தொடர்ந்து மூன்று முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016-ல் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (சுமார் 3,645 வாக்குகள்) திமுக வேட்பாளர் மா. இராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2021-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். திமுக சார்பில் ஆர். வைத்தியலிங்கம் காலமிறக்கப்பத்திருப்பது,டெல்டா அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
தென் தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பி.எச். மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், திமுக வேட்பாளர் பூங்கோதையை சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக 2001 ஆம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

