ஆம்பூரில் பயங்கரம் | மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகன்.. எப்படி கிடைத்தது துப்பாக்கி.? அதிர்ச்சியில் ஆம்பூர் மக்கள்..


கணவன் மனைவி கருத்து வேறுபாடு, குடிகார கணவர்களின் கொடுமைகள் தட்டிக்கேட்கும் மனைவியை கொலை செய்வது, மாமியாரை கொலை செய்வது, மாமனாரை கொலை செய்வது என்று தினமும் பல சம்பவங்கள் நடந்தேறி விடுகிறது. இதில், பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமோ,காதல் திருமணமோ எதுவும் விதி விலக்கல்ல.

அதிகமாக குடிகார கணவர்களின் அட்டகாசங்களே பெண்களையும் அவர்களது பெற்றோர்களையும் பெரிய அளவில் பாதித்து விடுகிறது. குறிப்பாக, முறையற்ற நபர்களின் காதல் வலையில் குருட்டுத்தனமாக விழும் பெண்களின் வாழ்க்கையை இருள் சூழ்ந்து விடுகிறது. இப்படித்தான் ஆம்பூர் மாதனூர் தேவலாபுரம் வசித்து வந்த பெண்ணின் வீட்டில் பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நபர் தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். அவரை காதலித்து, திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி, அதன் பின்னர் அந்த குடிகார கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு, வேதனையில் தனது தந்தை வீட்டில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் பிரீத்தி என்ற பெண். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணின் தந்தையை கொலை செய்திருக்கிறார் சதீஷ் என்ற வாலிபர்.

மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்

ஆம்பூர் அடுத்த மாதனூர் தேவலாபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக மருமகனே மாமனாரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது மாதனூர் ஊராட்சி ஒன்றியம்.. இங்குள்ள தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மாட்டு வண்டி ஓட்டித் தனது குடும்பத்தை மிகவும் சிரமப்பட்டு கவனித்து வந்தார். இவருடைய மகள் பிரீத்தி, அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதான சதீஷ் என்பவரைக் காதலித்து சில வருஷத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சதீஷ் வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 4 மாதக் குழந்தையும் உள்ளனர்.

இந்தத் தம்பதியின் வாழ்க்கையில் ஆரம்பம் முதலே நிம்மதி இல்லாத கடுமையான சூழலே நிலவி வந்துள்ளது. சதீஷுக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைகள் இருந்ததும், அவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்று சதீஷின் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இதனை அறிந்தே சிக்கல்களுக்கு நடுவேதான் பிரீத்தி அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார்.

பெங்களூரு மற்றும் உள்ளூர் பகுதிகளில் வெல்டிங் வேலைக்குச் சென்று வந்த சதீஷ், நாளடைவில் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் தனது மனைவி பிரீத்தியை அடித்துத் துன்புறுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று தெரிய வருகிறது. கணவனின் கொடுமையை தாங்காத பிரீத்தி தனது 2 குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு தந்தை ரவியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

கணவனிடமிருந்து நிரந்தரமாக விடுபட நினைத்த பிரீத்தி, சமீபத்தில் சதீஷுக்கு விவாகரத்து கோரி சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி வைத்தார். இந்த நோட்டீஸை பார்த்த சதீஷ் எரிச்சலும் கோபமும் அடைந்து, அடிக்கடி மதுபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று பிரீத்தியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம்போல போதையில் வந்த சதீஷ், பிரீத்தியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது மகளின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகக் தந்தை ரவி, சதீஷைத் தட்டி கேட்டு கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் அங்கிருந்து வெளியேறிய சதீஷ், பக்கத்து தெருவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று அங்கு அவர் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மறுபடியும் மாமனார் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்.

கண் இமைக்கும் நேரத்தில் ரவியை நோக்கித் துப்பாக்கியால் சுட, குண்டு பாய்ந்த ரவி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மயங்கிய நிலையில் இருந்த ரவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ரவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் தப்பியோடிய சதீஷை பிடிக்கதேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆம்பூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி புழக்கம் இருப்பதை உறுதி செய்துள்ளது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டை முவாய்க்கும் சமூக ஆர்வலர்கள். இதுபோன்ற ஆயுத கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


banner

Related posts

இசைஞானி இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ambalam News

‘’சொசைட்டி பரிதாபங்கள்’’ வீடியோ விவகாரம் – நடிகர் தாடி பாலாஜி ஆதரவு

Ambalam News

புதுமை பெண் திட்டம் | மாணவி சொன்ன நிஜ கதை.. கண்ணிர்விட்டு அழுத உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

Ambalam News

Leave a Comment