சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து பா.ம.க-வின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று நடைபெற்றது. மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி, பா.ம.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த பொதுக் குழு கூட்டத்துக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 3,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
பா.ம.க பொதுக்குழு அரங்கத்தில் மொத்தம் 2150 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் 3,100-க்கும் அதிகமானோர் பொதுக் குழு உறுப்பினர்கள் அரங்கத்துக்கு வந்தனர். இவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். அரங்கத்தில் இடம் கிடைக்காதவர்கள் வெளியே காத்திருந்தனர். பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு மேடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. கடைசி வரை அந்த இருக்கை எடுக்கப்படவில்லை.

பொதுக்குழு கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளையும் பாட்டாளி சொந்தங்களையும் வரவேற்று பேசினார் அன்புமணி ராமதாஸ் அடுத்த ஓராண்டுக்கு பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் அந்தந்த பொறுப்புகளில் அப்படியே தொடர்வார்கள் என்றும், மீண்டும் பா.ம.க-வின் உட்கட்சி தேர்தல் 2026 ஆகஸ்ட் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை அரங்கில் கூடியிருந்த 2500 பொதுக்குழு உறுப்பினர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அன்புமணி, டாக்டர் ராமதாசுடன் சமாதான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவருடன் இருக்கும் சில குள்ளநரிகள் அதனை கெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஒருமுறை இரண்டு முறை அல்ல, இதுவரை 40 முறை சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்று உள்ளது. காலையில் சரி என்கிறார். உடன் இருப்பவர்கள் சதி செய்வதால் அடுத்த நாள் மறுக்கிறார். இருவரும் சேர்ந்து கையொப்பமிடும் அதிகாரத்தை வைத்துக் கொள்ளலாம் என பேசி முடித்தோம். அவருடன் இருப்பவர்கள் சதி செய்ததால் பிறகு அவர் மறு தெரிவித்துவிட்டார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். அந்த தீர்மானத்தை ஒரு மனதாக நாம் நிறைவேற்றி உள்ளோம். நமக்கு இரண்டு இலக்குகள் இருக்கிறது. நமக்கு யார் வரவேண்டும்? அடுத்தது யார் வரக்கூடாது.? என்ற இரண்டு இலக்குகள் உள்ளது. இப்போதைய இலக்கு தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். இதைத்தான் தமிழகம் முழுவதும் தெருத்தெருவாக சொல்லி வருகிறேன். தி.மு.க வரக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். 2026 இல் யார் ஆட்சிக்கு வரவேண்டும்.? அது ரொம்ப முக்கியம். உங்கள் விருப்பப்படி தான் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி அமைக்கும். அதனை இன்னும் சிறிது காலத்தில் செய்வோம். நல்லதொரு கூட்டணியை மெகா கூட்டணி அமைப்போம்.. நாம் ஆட்சிக்கு வருவோம். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்று எனக்கு தெரியும். உங்களுடைய விருப்பபடிதான் அந்த கூட்டணிய்டை அமைப்போம்.

அதேபோல முன்னாள் பேசியவர்கள், தமிழகத்தில் பாமகவினுடைய வாக்கு விழுக்காடு ஆறு விழுக்காடு 7 விழுக்காடு என்று கூறினார்கள். தேசிய அளவில் பார்க்கும்போது ஒன்னேகால் விழுக்காடு வாக்குகளை தான் திமுக பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல தான் தமிழகத்தில் பாமகவினுடைய வாக்கு விழுக்காடு ஆறு விழுக்காடு 7 விழுக்காடு என்று இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல வாக்குகளை பெற்று நாம் ஆட்சி அமைக்கலாம். நாம் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும் அடுத்த ஆறு மாத காலம் தேர்தலுக்காக நீங்கள் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும்.
டாக்டர் ராமதாஸ் தான் நம்முடைய குலதெய்வம் அவர்தான் நம்முடைய வழிகாட்டி. உருவத்தில் அவர் இங்கே இல்லை என்றாலும் உள்ளத்தில் இருக்கிறார். நிரந்தரமாக அவருக்கு இங்கே ஒரு நாற்காலி இருக்கிறது இது அய்யாவுடைய நாற்காலி. ஐயா தான் நம் கட்சியை நிறுவனர் அதில் மாற்று கருத்து கிடையாது. இது ஐயாவுக்கு நிரந்தரமான நாற்காலி. நிச்சயம் அவர் வருவார் என்று நம்புகிறேன். நான் பதவிக்காக பொறுப்புக்காக வரவில்லை. காலத்தின் கட்டாயத்தல் இப்போது உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன்.
அவர்தான் நம்முடைய குலதெய்வம் சில நேரங்களில் சாமிக்கு கொஞ்சம் கோபம் வரும் அதன் பிறகு நாம் காவடி எடுப்போம் தீ மிதிப்போம். எதை எதையோ செய்வோம். இங்க என்னனா.? இங்க சாமி பிரச்சனை இல்லை பூசாரி தான் பிரச்சனை. நாம சாமிக்கு என்னென்ன வழிபாடு செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் பூசாரிகள் தடையாக இருக்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் ஒரு தேசிய தலைவர், ஒரு சாதனையாளர், ஒரு சமூக சீர்திருத்தவாதி. சமூக சீர்திருத்தவாதி என்றால் இந்தியாவிலேயே ஒரு ஐந்து ஆறு பேர் தான் உள்ளனர் அவர்களில் ஒருவர் தான் டாக்டர் ராமதாஸ்.
நமக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர். சமூக நீதி என்றால் என்ன.? என்ற பாடத்தை நமக்கெல்லாம் கற்றுக் கொடுத்தது டாக்டர் ராமதாஸ் தான். நான் ஒன்றும் பிடிவாதக்காரன் கிடையாது. எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று தான் சொல்கிறேன். இதுவே 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சூழல் இருந்திருந்தால் நான் யோசிக்க போவதே கிடையாது. பதவி பொறுப்பு தலைவர் பதவி மீது ஆசை கிடையாது எனக்கு இந்த தலைவர் பதவி வேண்டும் என்று நினைத்திருந்தால் 15 ஆண்டுகள் முன்பே கேட்டு வாங்கி இருப்பேன். பதவி பொறுப்புக்காக நான் இந்த கட்சிக்கு வரவில்லை என்னுடைய நோக்கமே சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நிச்சயமாக பாட்டாளி மக்கள் கட்சி ரத்தத்தாலும் வியர்வையாலும் உருவான இயக்கம். இந்த இயக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக உழைத்து வருகிறோம்.

எந்த கண் வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். உங்கள் நிலை எனக்கு புரிகிறது. உங்கள் வலி புரிகிறது. இரண்டு கண் வேண்டும் என்றுதானே.? சொல்வீர்கள். மனதில் வலியை தாங்கி கொண்டு நிற்கிறேன். ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
நேற்று நீதிமன்றதில் இருந்து வெளியே வந்த போது, பொதுக்கூட்டம் நடத்த நமக்கு தடை இல்லை என நீதிமன்றம் கூறியபோது அதை கொண்டாட எனக்கு மனமில்லை. ஏனென்றால் யாரை எதிர்ப்பு இந்த தீர்ப்பை நாம் பெற்றுள்ளோம் என யோசித்தேன். நாம் ஒரே குடும்பம். நான் கடைசி வரை இதைத்தான் நினைக்கிறேன். நமக்குள்ளேயே எதிர்ப்பு. அதற்கு ஒரு தீர்ப்பா.? ஊடகத்தை சந்தித்து இரண்டு மாதங்கள் ஆகிறது எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என மணி கணக்கில் ஊடகத்தினரை சந்தித்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்பவன். திருப்போரூர் திருவள்ளுர்ன்னு நடக்குறேன் நடக்குறேன் யாருமே செய்தி போடவில்லை.
டாக்டர் ராமதாசு உடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருமுறை, இரண்டு முறை கிடையாது 40 முறைக்கு மேல் நான் பேசி விட்டேன் நேற்று கூட நான் பேசினேன். குடும்பம் உறவுகள் நண்பர்கள் நலம் விரும்பிகள் தெரிந்தவர்களை வைத்து பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். காலையில் அய்யா சரி என்பார். இடையில் இருக்கக்கூடிய அந்த பூசாரிகள் கெடுத்து விடுகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போடும் அதிகாரத்தை வைத்துக் கொள்வோம் என பேசினோம். டாக்டர் ராமதாஸ் ஒப்புதல் கொடுத்தார் ஆனால் அதன் பிறகு நான் மட்டும்தான் கையொப்பம் போடுவேன் அந்த அதிகாரம் எனக்கு மட்டும்தான் வேண்டும் என கேட்டார் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு என்ன வேண்டும் அய்யாவோட மானம் மரியாதையை விட நமக்கு என்ன வேண்டும்.
என்னை நிரந்தர தலைவர்கள் என்று கூறினார்கள். இது ஜனநாயக கட்சி. நீங்கள் தான் என்னை தலைவர் பொறுப்பிற்கு முன்பு தேர்ந்தெடுத்தீர்கள். பொது குழு முடிவு செய்பவர்கள் தான் தலைவர்கள். நீங்கள் யாரை தலைவராக முடிவு செய்கிறார்களோ.? அவர்தான் தலைவர். நம்முடைய கட்சி ஜனநாயக கட்சி. இரவும் பகலும் இந்த பிரச்சனை சிந்தனையை ஓடிக் கொண்டிருப்பதால் நான் உடல் மெலிந்து விட்டேன். நான் ஏதோ டயட் இருந்து உடல் மெலிந்ததாக நண்பர்கள் கேட்கிறார்கள் ஆனால் நான் நிம்மதி இல்லாமல் உடல் எடை குறைந்துள்ளேன்.
திமுகவை விரட்ட வேண்டிய சூழலில், நமக்குள்ளேயே மாறி, மாறி பதிவிட்டு கொண்டு பேட்டிகள் கொடுத்துக் கொண்டு இருப்பது வேதனையளிக்கிறது. சண்டையிட வேண்டாம் பேட்டிகள் கொடுக்க வேண்டாம். இப்படி ஒரு சூழல் வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது.
இதைத் தொடர்ந்து திமுகவை சாடிய அன்புமணி ராமதாஸ்…
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஒழுங்கா குடுத்துருங்க, இல்லையென்றால் சிறை நிரப்பும்போராட்டம் நடக்கும். இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை. பித்தலாட்டம் செய்கிறது திமுக. இந்த சமுதாயம் குடிதக்கனும் கஞ்சா பயன்படுத்தணும் படிப்பறிவு இல்லாம இருக்கணும், ஆடு மாடு மேக்கணும் ,குடிசையிலேயே இருக்கணும், ஓட்டு மட்டும் போடணும், எலக்சன் வந்தா பாட்டிலும் காசும் குடுப்பாங்க வாங்கிக்கிட்டு ஓட்டு போடணும், இவங்க குடும்பம் மட்டும் நல்ல இருக்கணும். கொள்ளை அடிக்க இவர்களுக்கு ஓட்டு போடவேண்டும்.
வன்னியர் சமுதாயமும் பட்டியலின சமுதாயமும் முழுமையாக திமுகவை புறக்கணிக்கவேண்டும். இந்த இரு சமுதாயங்களுக்கும் மு.க ஸ்டாலின் துரோகம் செய்து வருகிறார். சமூகநீதி குறித்து பேச அழைத்தேன். அவர்கள் வரவில்லை. சமூகநீதி பற்றி பேச தகுதியற்றவர்கள்.
திமுக சமூக நீதியின் துரோகி, திமுக சமூக நீதியின் விரோதிகள், திமுக வன்னியர்களின் விரோதி, திமுகவிற்கு வன்னியர்கள் மீது வன்மம். ஆலந்தூரில் வன்னியர்கள் 40 வருடமாக மாணவர்களுக்காக பயன்படுத்திய இடத்தை காலி செய்தனர். அதை மீட்க உச்ச நீதிமன்றம் வரை சென்றோம். எவ்வளவோ பேர் கொள்ளை அடிக்கிறார்கள் அது தெரியவில்லையா.? ஏன் எங்கள் சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறீர்கள் என்று தொடர்ந்து என்று பேசினார்.