காலில் விழுந்த எல்.முருகன் | அதிமுக தனபால் வீட்டுக்குச் சென்று காலில் விழுந்து ஆசி பெற்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன்! நெகிழ்ச்சியில் உருகிய.? தனபால்..


அவிநாசி தொகுதியின் எம்எல்ஏவாக இரு முறை வென்றவர் தனபால், இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சபாநாயகராகவும் இருந்தார். இந்த முறை அவிநாசி தொகுதியில் போட்டியிட தனபால் அதிமுகவில் வாய்ப்பு கேட்ட நிலையில், அவருக்கு தொகுதியை ஒதுக்காமல் அந்த தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. தன்னிடம் இந்த தகவலை கூட அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் சொல்லவில்லை என தனபால் வருத்தமடைந்தார். மேலும் தனக்கு மரியாதையும் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். உடல்நிலை சரியில்லாத தன்னை யாரும் பார்க்கக் கூட வரவில்லை என்று தனது வருத்ததை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி 1998 ல் சென்னையில் தனக்கு விபத்து ஏற்பட்டது விபரம் அறிந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவித்திருந்தார்.

இதுகுறித்து தனபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய 1972 ஆம் ஆண்டிலிருந்து நான் என்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கழகப் பணியாற்றி வருகிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பின்பு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டவன் .

2001-2006, 2011-2016, 2016-2021 மற்றும் 2021-2026 என நான்கு முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2001-2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த காலகட்டத்தில், ஆதி திராவிடர் நலன், உணவு, கூட்டுறவு போன்ற இலாக்காக்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் என்னை அமைச்சராக நியமித்தார்கள்.

2011 ஆம் ஆண்டு என்னை பேரவைத் துணைத் தலைவராக்கிய மாண்புமிகு அம்மா அவர்கள், 2012 ஆம் ஆண்டு பேரவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினார்கள். 2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பேரவைத் தலைவர் பொறுப்பினை மாண்புமிகு அம்மா அவர்கள் எனக்கு வழங்கினார்கள். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன் நான்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நீண்ட நாட்கள் பேரவைத் தலைவர் பதவியை வகித்தவன் என்ற பெருமையை எனக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் வழங்கினார்கள். இதனை நினைக்கும்போது எனது நெஞ்சம் நெகிழ்கிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன் என்பது உண்மை. ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை.
உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் என்னுடைய மகன் திரு. லோகேஷ் தனபால் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னைப் பொறுத்த வரையில், எனக்கு ஆதியும், அந்தமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்”. இவ்வாறு தனபால் வருத்ததோடு தெரிவித்திருந்தார்.

ஆனால் தனபாலின் குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக தலைமை எவ்வித விளக்கமோ, கருத்தோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருத்ததில் இருந்த, முன்னாள் சபாநாயகரும் அவிநாசி தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ள தனபாலை நேரில் சந்தித்த அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். தனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த தனபால் நெகிழ்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலில் அவிநாசி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு, அதிமுக மூத்த தலைவர் மற்றும் அவிநாசி தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்தவருமான மதிப்பிற்குரிய அண்ணன் . P. தனபாலை நேரில் சந்தித்து ஆசி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு. சேவூர் G வேலுச்சாமி அவர்கள் உடனிருந்தார். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தனபாலின் வீட்டுக்கு சென்று, பாஜக மூத்த தலைவர் எல்.முருகன் தனபாலுக்கு பொன்னாடை போர்த்தி அவரது காலிலும் விழுந்து ஆசி பெற்றார். நெகிழ்ச்சியுடன் எல்.முருகனை வாழ்த்தி அனுப்பியுள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபால்.


banner

Related posts

பொய் புகார்.? நிகிதா மீது சிபிஐ சந்தேகம் – அஜீத்குமார் வழக்கு

Ambalam News

நியாயமான – சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..

Ambalam News

பத்திரிக்கை கொடுக்க சென்ற தவேக நிர்வாகி தாய் தந்தையுடன் பலி.. புதுமாப்பிள்ளைக்கு இப்படியா நடக்கணும்.? உறவினர்கள் வேதனை

Ambalam News

Leave a Comment