சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்பவர்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக துரைப்பாக்கம் குற்றப்பிரிவுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இந்நிலையில், சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை, டாக்டர் அம்பேத்கார் புரட்சி நகர், சுப்பிரமணிய சுவாமி தெருவில் வசித்து வரும் தேவநாதன் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டிலிருந்த 6.5 சவரன் நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இச்சம்பம் குறித்து 6.5 சவரன் தங்க நகைகள் திருடுபோனதாக, அருகில் உள்ள துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தரமணி சரக உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைத்து வீடுகளை கொள்ளையடிக்கும் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 19 வயதான பிரகாஷ் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான பிரகாஷை காவல் நிலையத்தில் வைத்து, விசாரணை மேற்கொண்டதில், வீடுகளில் கொள்ளையடித்தது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது நண்பர்களான அஷ்வின் ஜோசப்(21), அய்யனார்(21) ஆகியோர் கூட்டாக சேர்ந்து பூட்டிக்கிடக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பது குறித்து விசாரணையில் கூறியுள்ளார்.
பின்னர் பிரகாஷின் வாக்குமூலத்தை அடுத்து, அஷ்வின் ஜோசப், அய்யனார் ஆகியோரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைதான மூவரும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் தங்க நகைகளை அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவரிடம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் வழக்கறிஞர் மணிகண்டன் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், உள்ள அடகு கடைகளில் கொள்ளையடிக்கபட்ட தங்க நகைகளை கொடுத்து, அதற்கு பதிலாக, புதிய நகைகளை எடுத்துக் கொள்வார் என்று தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தால், அவர்களை ஜாமீனில் வெளியே கொண்டுவர வழக்கறிஞர் கட்டணத்திற்கு பதிலாக, கொள்ளையடித்த தங்க நகைகளை வழக்கறிஞரிடம் கொடுத்ததாக விசாரணையில் கூறியதாக கூறப்படுகிறது.
கைதான இளைஞர்கள் பெருங்குடி உள்ளிட்ட பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடித்து அதில், கிடைக்கும் தங்க நகைகளை வழக்கறிஞர் மணிகண்டனிடம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்கிய அடகு கடை உரிமையாளர்களை துரைப்பாக்கம் காவல் நிலையம் வரவைத்து வழக்கறிஞர் மணிகண்டன் கொடுத்த பழைய தங்க நகைகளில் 6 சவரன் தங்க நகையை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணயில், கடந்த ஜூலை மாதம் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த அஞ்சுதம்மாள் என்ற பெண்மணி வேலைக்கு சென்று இருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துள்ளார். அஞ்சுதம்மாள் வீட்டில் திருடிய தங்க நகையை வழக்கறிஞர் மணிகண்டனிடம் கொடுத்ததாக பிரகாஷ் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் பட்டப்பகலில் கொள்ளை அடிப்பதில் கில்லாடியான பிரகாஷ் அஞ்சுதம் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் சிறை சென்று, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து வழக்கறிஞர் மணிகண்டன், பிரகாஷ், அஷ்வின் ஜோசப், அய்யனார் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணைக்கிடையே, போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்ததாகவும், இதனால் வழக்கறிஞர் மணிகண்டன் மற்றொரு வழக்கறிஞர் மூலம் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியதாக கூறப்படுகிறது. அப்பொழுது திருடிய வழக்கில் சிறை சென்றால், தன்னை ஜாமீனில் வெளியே எடுக்க கொள்ளையர்களிடம் பணம் இல்லாததால், 2 சவரன் தங்க நகையை மட்டும் கொள்ளையன் பிரகாஷ் கொடுத்தார் என்று கூறி 2 சவரன் தங்க நகையை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுடன் ஒரு வழக்கறிஞரும் சம்பந்தப்பட்டிருப்பதும், கைது செய்யப்பட்டிருப்பதும், வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Related posts
Click to comment