கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தவெக வடக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 நிர்வாகிகளை கைது செய்தனர்.
இந்நிலையில், கரூர் சம்பவத்தை விசாரிக்க சென்னை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்புக் குழுவிடம் கரூர் நகர காவல்நிலையத்தினர் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு குழு ஆய்வு நடத்தியது. விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கி உள்ளதாக ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார். மேலும் விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் தற்போதைக்கு ஏதும் கூற முடியாது என ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.
ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் எஸ்.பி. விமலா, சிவில் சப்ளை சிஐடி எஸ்பி சியாமளா தேவி ஆகியோர் நீதிமன்ற உத்தரவுப்படி இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு உதவ இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி என எட்டு அதிகாரிகள் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.